×

கோவையிலிருந்து உடுமலை வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரத்திற்கு தினமும் ரயில் இயக்க கோரிக்கை

உடுமலை: கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக தினமும் தூத்துக்குடி,ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என உடுமலை ரயில்பயணிகள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை ரயில் பயணிகள் நல சங்க கூட்டம் நேற்று உடுமலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆடிட்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரும்மாறு: உடுமலை ரயில் நிலையத்தில் அமிர்தா விரைவு ரயில் சோதனை அடிப்படையில் 6 மாதத்திற்கு மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி நிரந்தரமாக உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும். கோவை அல்லது மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை வரை பயணிகள் ரயில் ஒன்றை இரண்டு வழித்தடத்திலும் காலையிலும்,மாலையிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் புதிதாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்டர் வழிப்பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட கோவை- ராமேஸ்வரம், கோவை- தூத்துக்குடி விரைவு ரயில் மற்றும் விரைவு பயணிகள் ரயில் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். பகல்நேர விரைவு பயணிகள் ரயில் ஒன்றினை மேட்டுப்பாளையம்,கோவையிலிருந்து பொள்ளாச்சி,உடுமலை,பழனி,திண்டுக்கல்,திருச்சி வழியாக சென்னை அல்லது தாம்பரம் வரை இயக்கினால் பொள்ளாச்சி,உடுமலை நகர மக்களுக்கு திருச்சி,விழுப்புரம் வழியாக சென்று வர பெரிதும் பயனுடையதாக இருக்கும். கோவை பொள்ளாச்சி,உடுமலை,பழனி பகுதியில் உள்ள பொதுமக்கள் தென்காசி,குற்றாலம் செல்ல ஏதுவாக புதிய இரவு நேர கோவை- செங்கோட்டை விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடுமலை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தினர் பயணிகள் வசதிக்காக வாகன நிறுத்துமிடம், சரக்கு கிடங்கு வசதி, அமைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

கேரள மாநில சுற்றுலா தலங்களான மறையூர்,மூணார் செல்லும் பயணிகள் இறங்க வேண்டிய இடம் என்பதற்கான அறிவிப்பு பலகையை உடுமலை ரயில் நிலையத்தில் வைக்க ஆவண செய்ய வேண்டும். பாலக்காடு-திருச்செந்தூர் ரயில் உடுமலை ரயில் நிலையத்தில் தற்போது 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்கிறது. இதனை 5 நிமிடங்களாக உயர்த்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியதோடு இதனை நிறைவேற்றி தரும்படி மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்புவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Tags : Daily Express ,Kovai ,Udumalai ,Rameswaram ,Thoothukudi , Coimbatore, Pollachi, Thoothukudi, train
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...