×

முதுமலை அழைத்து வரப்பட்ட மசினி யானைக்கு சிகிச்சை

ஊட்டி: முதுமலை தெப்பகாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மசினி யானை தொடர் சிகிச்சைகள், கவனிப்பு காரணமாக நல்ல உடல்நிலையுடன் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கார்குடி மசினியம்மன் கோயில் அருகே, கடந்த, 2006ல் தாயை விட்டு பிரிந்த 8 மாத குட்டியானை மயக்க நிலையில் கிடந்தது. அதனை வனத்துறையினர் காப்பாற்றினர். மசினியம்மன் கோயில் அருகே மீட்கப்பட்டதால் அந்த யானை குட்டிக்கு மசினி என, பெயரிடப்பட்டது. வனம் சூழலில் வளர்ந்த யானை குட்டிக்கு தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் வைத்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி தினத்தில், யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 2015ல், மசினி யானை சமயபுரம் கோயிலுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ேம மாதம் மசினி தாக்கியதில் அதன் பாகன் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, கோயில் யானை மசினியை, தேவையான சிகிச்சை அளிக்கவும், மீண்டும் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு படி கடந்த ஜனவரி மாதம் தெப்பக்காடு யானை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்து சேர்ந்தது. முகாமில் மசினி யானை தனியாக வைத்து அதற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதன் உடலில் இருந்த காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனையில் மசினிக்கு வேறு எந்த வித நோய் பாதிப்புகளும் இல்லை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து மற்ற வளர்ப்பு யானைகளுடன் அவை சேர்க்கப்பட்டுள்ளது. மசினி தற்போது நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.  வனத்துறையினர் கூறுகையில், மசினி யானைக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக உடல் நிலை நன்கு தேறியுள்ளது. முதுமலைக்கு அழைத்து வந்த ஆரம்பத்தில் மாயாற்றில் குளிப்பதை விரும்பாது. தொடர்ந்து உடல்நிலை தேறிய நிலையில் நாள்தோறும் மாயாற்றில் குளிக்கிறது. அழைத்து வந்த போது 1900 கிலோ இருந்தது. தற்போது 400 கிலோ எடை கூடி 2300 கிலோவாகவும், நல்ல ஆரோக்கியமாக உள்ளது, என்றனர்.

Tags : Mudumalai, Masini Elephant
× RELATED யானை தாக்கி விவசாயி பலி