×

‘பானி’யால் தண்டவாளங்கள் சேதம்: ராமேஸ்வரத்துக்கு 8 மணிநேரம் தாமதமாக வந்தது ‘புவனேஸ்வர்’

ராமநாதபுரம்: பானி புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால், ராமேஸ்வரத்திற்கு நேற்று 8 மணிநேரம் தாமதமாக வந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில், பின்னர் 3 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து ஒடிசா மாநிலம், புவனேஸ்வருக்குச் செல்லும் புவனேஸ்வர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி, சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் வழியாக திங்கள் கிழமை மாலை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் செல்கிறது.

சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பானி புயல் காரணமாக அங்கு ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், சனிக்கிழமை இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரம் வரவேண்டிய புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணிநேரம் தாமதமாக நேற்று காலை (ஞாயிறு) 8 மணிக்கு ராமேஸ்வரம் வந்தது. பின்னர் பராமரிப்பு பணிகள் முடித்து மீண்டும் மூன்று மணிநேரம் தாமதமாக காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்திருந்து புறப்பட்டு சென்றது. ரயில் தாமதம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை செய்யும் ஆந்திர, ஒடிசா மாநிலத்திலிருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். மேலும் பகல் நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருந்து தாமதமாக சென்றனர்.

Tags : Bani ,Bhuvaneswar ,Rameshwaram , Fani storm, Bhubaneswar, Rameswaram
× RELATED சித்திரை அமாவாசையை முன்னிட்டு...