×

பரபரப்பான பைனலில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை த்ரில் வெற்றி: கடைசி பந்தில் சூப்பர் கிங்ஸ் ஏமாற்றம்

ஐதராபாத்: சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் இறுதிப் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. .
ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக மிட்செல் மெக்லநாகன் இடம் பெற்றார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

மும்பை தொடக்க வீரர்களாக குவின்டான் டி காக், கேப்டன் ரோகித் ஷர்மா களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால், அவர் வீசிய 3வது ஓவரில் டி காக் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார். ஓவருக்கு 10 ரன் என்ற வேகத்தில் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் எகிறிய நிலையில்... டி காக் 29 ரன் (17 பந்து, 4 சிக்சர்), ரோகித் 15 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

4.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 45 ரன் என்ற நிலையில் இருந்து, 5.2 ஓவரில் 45 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து மும்பை அணி திடீர் சரிவை சந்தித்தது. இதனால் அடுத்து வந்த வீரர்கள் அதிரடியான ரன் சேர்க்க முடியாமல் திணறினர். சூரியகுமார் யாதவ் 15 ரன், குருணல் பாண்டியா 7, இஷான் கிஷன் 23 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி கட்டத்தில் போலார்டு, ஹர்திக் இருவரும் ஸ்கோரை உயர்த்த போராடினர். ஹர்திக் 16 ரன் எடுத்து (10 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ராகுல் சாஹர், மெக்லநாகன் இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், போலார்டு அதிரடியாக விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

பிராவோ வீசிய கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளையும் அவர் பவுண்டரிக்கு விரட்ட, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது.போலார்டு 41 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஜஸ்பிரித் பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் தீபக் சாஹர் 3, ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் கிங்ஸ் துரத்தலை தொடங்கியது. தொடக்க வீரர்கள் டு பிளெஸ்ஸி, ஷேன் வாட்சன் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 33 ரன் சேர்த்தனர். டு பிளெஸ்ஸி 26 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ரெய்னா 8 ரன், ராயுடு 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் டோனி 2 ரன் மட்டுமே எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

சிஎஸ்கே 12.4 ஓவரில் 82 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. வாட்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மலிங்கா தவறவிட, இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர் அரை சதம் அடித்தார். மலிங்கா வீசிய 16வது ஓவரில் அவர் ஹாட்ரிக் பவுண்டரி விளாச, ஆட்டத்தின் போக்கு அடியோடு மாறியது. குருணல் வீசிய 18வது ஓவரில் வாட்சன் தொடர்ச்சியாக 3 சிக்சர்களைப் பறக்கவிட சென்னை அணி வெற்றியை நெருங்கியது. பிராவோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பரபரப்பான கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்ட நிலையில், வாட்சன் 4வது பந்தில் ரன் அவுட்டானார் (80 ரன், 59 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்).  கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், மலிங்கா யார்க்கராக வீச... தாகூர் எல்பிடபுள்யு முறையில் விக்கெட்டை இழந்தார். மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தி 4வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.


Tags : Super Kings ,match ,ball ,win ,Mumbai , The sensational Finale, in the run of 1, the triumph in Mumbai, Super Kings, was disappointed
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி