×

பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு மேம்பாடு: இந்தியா - வியட்நாம் ஒப்புதல்

ஹனோய்: ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா - வியட்நாம் நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9ம் தேதி, 4 நாள் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றார். அங்கு, அவர் அந்நாட்டு பிரதமர் குயென் ஜூஆன் புக், துணை ஜனாதிபதி டாங் தை ஜோக்  தைன், நாடாளுமன்றத் தலைவர் குயென் தை கிம் கான் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஹனாம் மாகாணத்தில் உள்ள தாம் சூ பகோடாவில் நடந்த ஐநா.வின் 16வது புத்தர் ஜெயந்தி விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், ஹோ சி மின்னில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று, உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வெங்கையா நாயுடுவின் வியட்நாம் வருகை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 வியட்நாம் பிரதமர், துணை ஜனாதிபதி, நாடாளுமன்றத் தலைவர் ஆகியோருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடத்திய பேச்சுவார்த்தை விரிவானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம், விண்வெளி, எண்ணெய், எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, புதிய கண்டுபிடிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் இரு தரப்பிலான  ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. மேலும், வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க நேரடி விமான சேவை தொடங்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளித்து சர்வதேச விதிகளின்படி, வெளிப்படையான அமைதி மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் தடையற்ற பொருளாதார நடவடிக்கைகள், சுமூகமான முறையில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவை பற்றியும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. வியட்நாமின் முன்னேற்றத்தில் நீண்ட காலமாக பங்கெடுத்து வரும் இந்தியா அளிக்கும் உதவித்தொகை, ராணுவ பயிற்சி திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. துணை ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் இரு தரப்பிலான உறவுகளை ஊக்குவிக்கும் விதமாகவும், பல்வேறு துறைகளில் இருநாடுகளும் அளித்து வரும் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யும் வாய்ப்பாகவும் அமைந்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vietnam ,India , Department of Defense, Cooperation, Development, India - Vietnam
× RELATED வியட்நாம் நாட்டில் நிதி மோசடி...