மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கிகி பெர்டன்ஸ் சாம்பியன்: சிட்சிபாஸிடம் வீழ்ந்தார் நடால்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரோமானியாவின் சிமோனா ஹாலெப்புடன் (3வது ரேங்க்) மோதிய பெர்டன்ஸ் (7வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய அவர், ஹாலெப்பின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 27 நிமிடத்துக்கு நீடித்தது. மாட்ரிட் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதால், மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பெர்டன்ஸ் முதல் முறையாக 4வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-2), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் டொமினிக் தீமை (ஆஸ்திரியா) போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் உள்ளூர் நட்சத்திரம் ரபேல் நடால் (2வது ரேங்க்) 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸிடம் (கிரீஸ், 9வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். களிமண் தரை மைதானங்களில் முடிசூடா மன்னனாகத் திகழும் நடால், சமீபத்தில் நடந்த போட்டிகளில் இளம் வீரர்கள் டொமினிக் தீம், சிட்சிபாஸிடம் தோற்றுள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்த தோல்விகள் நடாலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளன. மாட்ரிட் ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - சிட்சிபாஸ் மோதுகின்றனர்.

Related Stories: