×

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லாமல் பரிதவிக்கும் சென்னை மக்கள்

* அரசின் மெத்தனத்தால் தலைநகருக்கு வந்த வினை
* தண்ணீர் பிரச்னையால் வீடுகளை காலி செய்யும் அவலம்
* பணம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை

சென்னை: ‘பஞ்சத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்’ என்று தான் படித்திருப்போம். ஆனால் இப்போது தண்ணீர் பிரச்னையால் வீடுகளை காலி செய்யும் அவலத்தை சென்னை மக்கள் நேரடியாக சந்தித்து கொண்டிருக்கின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு சேறும் சகதியுமாக கிடக்கிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் தண்ணீர் மட்டும் தான் இப்போது வரை கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதுதவிர கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தினமும் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இதை வைத்து சென்னை மக்களின் தாகத்தை கூட தீர்க்க முடியாது.

குடிநீருக்கு தான் பஞ்சம் என்ற நிலை கடந்த காலங்களில் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் ஏரிகள், நீர்நிலைகள் எல்லாம் தண்ணீர் வற்றி வறட்சியின் பிடியில் சிக்கிவிட்டது. இதனால் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் அதாலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறுகள் எல்லாம் நீர் வற்றி தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. இதன் எதிரொலியாக சென்னை நகர் பகுதிக்குள் வசிக்கும் ஏராளமானோர் வீட்டு உபயோகத்துக்கு கூட தண்ணீர் இல்லாமல் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கழிவறையை பயன்படுத்துவதா? வேண்டாமா? தினம் குளிப்பவர்கள் கூட இரண்டு நாளைக்கு ஒரு முறை குளிப்பதா வேண்டாமா என்று யோசிக்கும் நிலையில் சென்னை மக்கள் உள்ளனர்.

அந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு மாற்று ஏற்பாடுகள் கைகொடுக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருவதால் மாற்று ஏற்பாடுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழக அரசின் அலட்சிய போக்கே சென்னை மக்களின் இந்த பரிதாப நிலைக்கு காரணமாக உள்ளது.

சென்னை முழுவதும் தற்போது குடிநீர் லாரிகள் மூலம் 8000 நடை வரை அடிக்கப்படுகிறது. கிடைக்கின்ற தண்ணீரை லாரிகள் மூலம் மட்டுமே தற்போது விநியோகம் செய்து வருகின்றனர். அதுவும் இலவச தண்ணீர் எல்லாம் இப்போது கிடையாது. மெட்ரோ வாட்டர் மூலம் வழங்கப்படும் தண்ணீரையும் ஒரு குடத்துக்கு இவ்வளவு ரூபா என்று ஏரியாவை பொறுத்து கட்டணம் நிர்ணயித்து வழங்குகின்றனர். அதை எதிர்த்து கேட்டால் அடுத்து அந்த ஏரியாவுக்கு தண்ணீர் கிடைப்பது சங்கடம் தான். எனவே யாரும் எதிர்த்து பேசாமல் கேட்ட காசை கொடுத்து தண்ணீர் கிடைத்தால் போதும் என்று பெற்று செல்கின்றனர். இதுதவிர குடிநீர் லாரிக்கு முன்பதிவு செய்தாலும் தண்ணீர் கிடைக்க 5 நாள் முதல் 15 நாட்கள் வரை ஆகிறதாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் தான் நகர் பகுதிக்குள் வர முடியும். அதனால் தான் இந்த கால தாமதம் என்று லாரி டிரைவர்கள் காரணம் கூறி வந்தனர்.

தற்போது சென்னை மக்களின் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதித்த காவல் துறை குடிநீர் லாரிகளுக்கு 24 மணி நேரம் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, சென்னையை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் எண்ணிக்கையோ அதிகம். அவர்களோ தண்ணீர் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீட்டுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5000 வரை தண்ணீர் கட்டணம் நிர்ணயிப்பதால் பலர் அந்த அளவுக்கு வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் வீடுகளை காலி செய்து விட்டு தண்ணீர் இருக்கும் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் பல வீடுகள் காலியாக கிடக்கிறது.

பருவமழை பொய்த்த போதே இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்படும் என்பதை அறிந்து கோடை காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததான் விளைவே சென்னை இந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சத்தால் அல்லோலப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து விசாரித்தால், இங்கு வாழ்வதா இல்லை ஊரை காலி செய்வதா என்ற எண்ணத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் பஞ்சத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அப்படி என்ன தான் பிரச்னை நிலவுகிறது என்பது அலசபட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:
ஆலந்தூர்:  ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்றவற்றை தூர்வாரி முறையாக பராமரிக்கவில்லை. இதனால் அவைகளில் தண்ணீர் இல்லை. குளிக்கவும் பிற தேவைக்காகவும் தண்ணீரையும் பணம் கொடுத்து வாங்க கூட்டம் அலைமோதுகிறது. பழுதடைந்த கைப்பம்புகளை சீர் செய்தால் கூட ஓரளவு தண்ணீர் பிரச்னையை சமாளிக்கலாம். ஆனால் அதையும் செய்ய அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. ஆங்காங்கே கூடுதல் சின்டெக்ஸ் தொட்டிகளை அமைத்து  மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பகுதியில் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்.

பல்லாவரம்:  பல்லாவரம் பகுதியில் அனகாபுத்தூர் மற்றும் பம்மல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் பல்லாவரம் பகுதியில் இரவு பகல் என எந்நேரமும் பொதுமக்கள் கையில் குடங்களுடன் சாலையில் திரியும் நிலையே உள்ளது. நீர் வளத்தை அரசு பாதுகாக்காததால் இந்த நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான எந்த முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்காதன் விளைவே தண்ணீர் பிரச்னைக்கு முக்கிய காரணம்.

தாம்பரம் :  தாம்பரம் சானடோரியம் பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக  அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தண்ணீர் முற்றிலுமாக இல்லை. பொது கழிப்பிடமும் தண்ணீர் இன்றி பயன்படுத்தமுடியாமல் மூடப்பட்டுளளது. வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் தண்ணீர் வற்றி வருவதால் ஒரு சில குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் மோட்டார்களை இயக்க வேண்டியுள்ளது. நகராட்சி நிர்வாக அந்த தண்ணீரை எடுத்து சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பி தண்ணீர் பிரச்னையை சமாளித்து வருகின்றனர்.

திருவொற்றியூர்:  மணலி அருகே சடையன் குப்பம் மற்றும் பர்மா நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திலிருந்து வரக்கூடிய குடிநீரை இப்பகுதியில் தெருக் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தற்போது குடிநீர் எப்போது வரும் என்று காத்து கிடக்கும் நிலை தான் உள்ளது. அப்படியே விட்டாலும் குழாய்களில் வேகம் குறைவாக இருப்பதால் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க நீண்ட நேரம் ஆகிறது. இதனால் பெண்கள் காலி குடங்களுடன் பல மணி நேரம் குடிநீர் குழாய்கள் முன்பு காத்திருக்கும் பரிதாபம் அரங்கேறியுள்ளது.  

பெரம்பூர்:  தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, கொடுங்கையூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், திரு.வி.க.நகர், துறைமுகம், மன்னடி உள்ளிட்ட வடசென்னை பகுதியில் தற்போது தினமும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களுடன் டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இதனால் வடசென்னை பகுதிகளில அடிக்கடி குடிநீருக்காக சாலை மறியல் போராட்டம் ஆங்காங்கே நடக்கிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால் தண்ணீர் பிரச்னைக்கு வடசென்னையில் பெரிய புரட்சியே வெடிக்கும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : Chennai , Bathing, drinking water, petite, Chennai people
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...