×

ரூ.1000 கோடி மதிப்புள்ள போதை பொருள் பதுக்கப்பட்ட வீடு ஐபிஎஸ் அதிகாரிக்கு சொந்தமானது: நைஜீரிய தம்பதியிடம் விசாரணை

நொய்டா: டெல்லி கிரேட்டர் நொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வீடு, ஐபிஎஸ் அதிகாரிக்கு சொந்தமானது என விசாணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் இதை வாடகைக்கு எடுத்து வந்த நைஜீரிய தம்பதி, துணிச்சலாக இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த பெண் பயணி நோம்சா லுடாலோ (31). இவர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் கடந்த 9ம் தேதி சிக்கினார். அவரிடம் 24.7 கிலோ எடை கொண்ட சூடோஎபிட்ரின் எனும் மருந்து இருந்தது. இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, நைஜீரிய தம்பதி இந்தப் பையை கொடுத்து, தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகானஸ்பர்க்கில் ஒப்படைத்தால், நல்ல பணம் தருவதாக கூறினர் என்றார்.

இதையடுத்து, அந்த பெண்ணிடம் போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர் இதன் அடிப்படையில், டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் 2 நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர்.  அந்த வீட்டில் 1,818 கிலோ சூடோஎபிட்ரின் மூலப்பொருள், 1.9 கிலோ கொகைன் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகப் பெரியளவில் செய்யப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் இது எனவும், உலகளவில் கடந்த 3 ஆண்டுகளில் 3வது பெரிய பறிமுதல் எனவும் கூறப்படுகிறது.

நைஜீரியாவைச் சேர்ந்த ஹென்றி இடோபர் (35), சிமாண்டோ ஒபோரா (30) என்ற பெண்ணும் இந்த வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு முதல் வாடகைக்கு எடுத்து போதை பொருள் கடத்தல் தொழில் செய்து வந்துள்ளனர். இந்த வீடு தேவேந்திரா பி.என் பாண்டே என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது. இவர் உத்தரப் பிரதேச காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவில் பணியாற்றி வருகிறார். லக்னோவில் வசிக்கும் இவரிடம் இது குறித்து கேட்டபோது, ‘‘புரோக்கர் மூலமாக இந்த வீட்டை கடந்த 2015ம் ஆண்டு வாடகைக்கு விட்டேன்.

அங்கு கடத்தல் நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது,’’ என கூறியுள்ளார். மேலும், நைஜீரிய தம்பதி கடந்த ஒராண்டாக இந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காததால், அவர்கள் மீது உள்ளூர் போலீசில் தேவேந்திரா பாண்டே புகார் கொடுத்துள்ளார். வீட்டு வாடகை ஒப்பந்தத்தில், ஏதாவது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களே பொறுப்பு எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தேவேந்திரா பாண்டே கூறியுள்ளார். இந்த வீட்டை அவர் கடந்த 2000ம் ஆண்டு ரூ.7.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.


Tags : narcotics house ,Nigerian ,officer ,IPS , Rs 1,000 crore, drugs, house IPS officer, owned, Nigerian couple, trial
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...