×

இறுதிப் போட்டிக்கான இலவச ஐபிஎல் டிக்கெட் கேட்ட கலால் துறை அதிகாரிக்கு மெமோ

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான 300 இலவச டிக்கெட் கேட்ட தெலங்கானா கலால் துறை உயரதிகாரிக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்தது. இப்போட்டிக்கான இலவச டிக்கெட் தரக்கோரி தெலங்கானாவின் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்ட கலால் துறை அதிகாரி பிரதீப் ராவ் என்பவர் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 9ம் தேதியிடப்பட்ட அந்த கடிதம், கலால் துறையின் அலுவலக சீல் உள்ள லெட்டர்பேடில் எழுதப்பட்டிருந்தது.

அதில், ‘கலால் துறை உயர் அதிகாரிகளுக்காக ஐபிஎல் பைனலுக்கான கார்ப்பரேட் பாக்ஸ் இலவச டிக்கெட் 50ம், இலவச பாஸ் 250ம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ என பிரதீப் ராவ் எழுதி உள்ளார். இது தொழில் வரிகள் மற்றும் கலால் துறை சிறப்பு தலைமை செயலர் சோமேஷ் குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் கூறுகையில், ‘‘இந்த விஷயத்தை தீவிரமாக பார்க்கிறோம். முதற்கட்டமாக சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை பாயும்,’’ என்றார். ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன், இலவச ஐபிஎல் டிக்கெட் கேட்டு டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதிய எரிசக்தி அமைச்சக இணை செயலாளர் கோபால் கிருஷண் குப்தா என்பவர் மீண்டும் ரயில்வே அமைச்சகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Tags : excise department officer ,IPL ,competition , Final match, free IPL ticket, excise department officer, memo
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி