×

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் அரசாணை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வெளியீடு: சட்ட வல்லுனர்கள் குற்றச்சாட்டு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் அரசாணை, திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே திடீரென வெளியிடப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நடவடிக்கை என சட்ட வல்லுனர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்து கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் ஆணையர் மாநில தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள பிடிஓக்கள் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தவும், திமுக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கை தள்ளிப்போடவும்தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்ட வல்லுனர் ஒருவர் கூறியதாவது. டிசம்பர் 2018 முதல் மே 2019 வரை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வெளியிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகவே வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரிக்கப்பட்ட பின்பு தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தமுடியும். அதற்கான முயற்சிகள் தமிழக தேர்தல் ஆணையம் இன்று வரை எடுக்கவில்லை. இப்போது பூத் வாரியாக எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் வெளியிடப்பட்டுள்ள ஆணை கண்துடைப்பே, இதில் எந்த முன்னேற்றமுமில்லை. திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்கை தள்ளிப்போடவே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Election Electoral List Publication Court ,Court Attorney , Local election, voter list, court court, publication, legal experts, indictment
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி