×

சென்னை குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல் உள்பட 4 ஏரிகளின் பராமரிப்பில் லட்சக்கணக்கில் ஊழல்: 2 ஆண்டுகளில் சுற்றுச்சுவர் புதுப்பித்த அவலம், பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: சென்னை குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி உள்பட 4 ஏரிகளின் பராமரிப்பு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் முறைகேடு செய்து இருப்பது அம்பலமாகியுள்ளது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் பூர்த்தி செய்கிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த நான்கு ஏரிகளின் முக்கிய நீராதாரம் வடகிழக்கு பருவமழை. இந்த 4 ஏரிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக கடந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2012-13ல் ரூ.57 லட்சம், 2013-14ல் ரூ.61 லட்சம், 2014-15ல் ரூ.65 லட்சம், 2015-16ல் ரூ.60 லட்சம், ரூ.2016-17ல் ரூ.40 லட்சம், 2017-18ல் ரூ.56 லட்சமும், புழல் மற்றும் சோழவரம் ஏரியில் 2012-13ல் ரூ.9 லட்சம், 2013-14ல் ரூ.13.48 லட்சம், 2014-15ல் 13.26 லட்சம், 2015-16ல் 11.67 லட்சம், 2016-17ல் ரூ.40.98 லட்சம், 2017-18ல் ரூ.9.89 லட்சம், பூண்டியில் 2012-13ல் ரூ.10.69 லட்சம், 2013-14ல் ரூ.9.62 லட்சம், 2014-15ல் ரூ.9.96 லட்சம், ரூ.2015-16ல் ரூ.8.77 லட்சம், ரூ.2016-17ல் ரூ.9.57 லட்சம், ரூ.2017-18ல் ரூ.13.29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை கொண்டு ஏரி கரைகள், கால்வாய்கள், ஷட்டர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நிதியை கொண்டு பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை. இதில் பல லட்சம் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக பராமரிப்பு பணிகளை செய்யாமல், அப்பணிகளை செய்ததற்காக இந்த நிதியை செலவிட்டதாக தமிழக அரசிடம் கணக்கு காட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட ஏரிகளுக்கு கடந்த 2016-17ம் நிதியாண்டில் அணைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளுக்கு நிதி பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு ரூ.3.85 கோடியும், புழல் ஏரிக்கு ரூ.2.31 கோடியும், சோழவரம் ஏரிக்கு ரூ.247, புழல் ஏரிக்கு ரூ.9 கோடி செலவில் மழை நீர் வடிகால், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ரூ.4 கோடி செலவில் செம்பரம்பாக்கம் ஏரி, ரூ.10.98 கோடி செலவில் பூண்டி ஏரி, ரூ.9 கோடி செலவில் புழல் ஏரி, ரூ.3 கோடி செலவில் சோழவரம் ஏரியில் மீண்டும் சுற்றுச்சுவர் புனரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஏரிகளில் 2 ஆண்டுகளிலேயே சுற்றுச்சுவர் புனரமைப்பு பணி மீண்டும் மேற்கொள்ளப்படுவதும் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏரிகளில் பராமரிப்பு பணிக்கு லட்சக்கணக்கில் வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசிடம் கேட்கிறது. அரசு சார்பில் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கு பலன் இல்லாத நிலை தான் உள்ளது. எனவே, இது தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pondi ,lakes ,lake ,shrine ,revival ,scandal , Chennai Drinking water, Pondi, Puttalam, 4 lakes and millions of corruption
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...