×

கடந்த சில மாதங்களில் ரூ.60 வரை விற்ற நிலையில் வரத்து குறைவால் பூண்டு விலை கிலோ ரூ.150 ஆக உயர்வு: ஜூன் மாதம் ரூ.200 வரை விற்கலாம் என வியாபாரிகள் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சந்தைக்கு பூண்டு வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது. பூண்டு விளைச்சல் செய்ய சரியான கலவையில் குளிர்ச்சி , வெப்ப காலநிலை அவசியம் என்பதால் வடமாநிலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. வடமாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதியில் பூண்டு விற்பனைக்காக தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பூண்டு வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’ஒவ்வொரு ஆண்டும் பூண்டு விளைச்சல் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கம் மற்றும் தண்ணீர் பிரச்னை காரணமாக கடும் வறட்சியால் பூண்டு வரத்து குறைந்துள்ளது.

வாரத்திற்கு 15 முதல் 20 லாரிகள் பூண்டு வரத்து இருக்கும். ஆனால், தற்போது வாரத்திற்கு 5 லாரிகள் மட்டும் வருவதால் விலை உயர்ந்துள்ளது. இதனால், மொத்த வியாபாரத்தில் பூண்டு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும், சில்லரை வியாபாரத்தில் கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பூண்டு விலை ரூ.200 வரை உயரும் வாய்ப்பு உள்ளது’’ என்றார். கடந்த மாதங்களில் பூண்டு விலை கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனையான நிலையில் தற்போது ரூ.150 வரை அதிகரித்துள்ளது. ஏற்கனவே தக்காளி விலை கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவதால் தக்காளி ரசம் வைக்க இயலவில்லை. இந்நிலையில், பூண்டின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பூண்டு ரசமும் வைக்க முடியாமல் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

Tags : During the past few months, the price of garlic was Rs. 150 per kg
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...