×

போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரம் இலங்கையை சேர்ந்த 3 பேர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: ரூ.5 ஆயிரத்துக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையை சேர்ந்த மேலும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று வந்த நபர்களின் பாஸ்போர்ட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் கியூ பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பலர் போலி முகவரியில் போலி பாஸ்போர்ட் உதவியுடன் சிலர் இலங்கைக்கு சென்று வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், கடந்த வாரம் பூந்தமல்லியில் பிடிபட்ட இலங்கையை சேர்ந்த 2 நபர்களும் போலி பாஸ்போர்ட் உதவியுடன் சென்னை வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து போலி பாஸ்போர்ட் யார் மூலம் வாங்கப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் தகவல்களை சேகரித்தனர். மேலும் கடந்த மாதம் சென்னை விமான நிலையம் மூலம் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்று கைது செய்யப்பட்ட நபர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடமும் தகவல் சேகரிக்கப்பட்டது.

பின்னர், கியூ பிரிவு போலீசார் கடந்த வாரம் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து போலி பாஸ்போர்ட் தயாரித்து அனைவருக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. வெளிநாடு செல்லும் நபர்களின் அவசரத்திற்கு ஏற்றப்படி  இவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை போலி பாஸ்போர்ட்டுகளுக்கு வசூல் செய்துள்ளனர்.

அதைதொடர்ந்து சென்னை, திருச்சி கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த கலையரசி, ராதாகிருஷ்ணன், கிருபா உட்பட 13 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையை சேர்ந்த சுரேந்திரன்(39), அரிகரன்(33), நிஷாத்தன்(35) ஆகிய 3 பேரை கியூ பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சில முக்கிய நபர்கள் குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Passport Producers ,Sri Lankan ,KU Section Police , Fake passport, affair, Sri Lanka, 3 arrested
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை