×

கோவையில் பரபரப்பு விமான நிலையம் மீது லேசர் ஒளிவீச்சு: ஓட்டலில் போலீசார் சோதனை

கோவை: கோவை விமான நிலையம் மீது லேசர் ஒளிவீச்சு தெரிந்ததால் நேற்று முன்தினம் இரவு அவிநாசி சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் போலீசார் சோதனை செய்தனர். இலங்கையில் சமீபத்தில் தேவாலயம், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கலாம் என கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை விமானநிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கோவை விமானநிலையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, அவிநாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து விமான நிலையம் நோக்கி கண் கூசும் வெளிச்சத்தில் லேசர் ஒளி அடிக்கடி தெரிந்தது. இதனை பார்த்து உஷாரான பாதுகாப்பு படை வீரர் இது தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தார். உடனே, சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வந்து, அவிநாசி சாலையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு விடிய, விடிய போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து லேசர் ஒளிவீச்சு பாய்ச்சப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. வேறு எங்கிருந்தோ யாராவது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சி இருக்கலாம் என கருதி போலீசார் கிளம்பி சென்றனர். இதனை தொடர்ந்து விமான நிலைய ஓடுபாதையில்  ஏராளமான கற்கள் கிடப்பதாக பாதுகாப்பு படை வீரர்கள் புகார் அளித்தனர். விசாரணையில், அருகில் உள்ள வீடுகளில் நடைபெறும் கட்டுமான பணியினால் விமான ஓடுதள பாதையில் கற்கள் விழுந்தது தெரிந்தது. இதையடுத்து வீட்டு உரிமையாளர்களிடம் கற்கள் விழாதவாறு பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி விட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : bus stop airport ,airport ,hotel , Coimbatore, airport, laser lights, police in the hotel, check
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...