×

தமிழகத்தில் குற்றவாளிகளை விரைவில் அடையாளம் காண கைவிரல் ரேகை பிரிவில் ஆதார் இணைப்பு பணி தீவிரம்: விரைவில் நடைமுறைக்கு வருகிறது

வேலூர்: தமிழகம் முழுவதும் குற்றவாளிகளை விரைவில் அடையாளம் காண கைவிரல் ரேகை பிரிவில் ஆதார் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இது நடைமுறைக்கு வர உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக காவல்துறை சென்னை, சென்னை ஊரகம், மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் காவல்துறை ஆணையாளர்கள் தலைமையில் இயங்குகின்றது. தமிழகம் 32 காவல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இயங்குகின்றன. இதில் சட்டம்- ஒழுங்கு, மாவட்ட குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது. இதில் மிக முக்கிய பிரிவாக கை விரல் ரேகை பிரிவு உள்ளது.
திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போது சம்பவ இடங்களுக்கு கைவிரல் ரேகை பிரிவு போலீசார் சென்று அங்கு பதிவாகியுள்ள கைவிரல் ரேகையை சேகரிப்பார்கள். பின்னர், பழைய குற்றவாளிகளின் கை விரல் ரேகை பதிவுகளை ஒப்பிட்டு பார்த்து, ஏற்கனவே குற்றம் செய்தவர்கள்தானா? புதிய குற்றவாளிகளா? என்று கண்டறிவார்கள். இதற்காக கைவிரல் ரேகை பிரிவில் பல்வேறு ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு விரல் ரேகையை ஆய்வு செய்ய பல நாட்கள் ஆகும். காகித ஆவணங்களும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பேக்ஸ் 7 என்ற புதிய சாப்ட்வேர், கைவிரல் ரேகை பிரிவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாப்ட்வேரில் தமிழகத்தில் உள்ள அனைவரது ஆதாரையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், நிமிடத்தில் குற்றவாளிகளை கண்டறிய முடியும்.  இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘காவல்துறையில் முக்கியமான கைவிரல் ரேகை பிரிவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் ஆதார் எண்களை, பேக்ஸ் 7 என்ற சாப்ட்வேரில் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன், குற்றவாளிகளின் ரேகை பதிவு எடுக்கப்பட்டால், கணினி மூலம் நிமிடத்தில் அவர் யார்? எந்தெந்த காவல்நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்’ என்றனர்.

Tags : Adhar ,Tamil Nadu , Adhar patch, work , finger line
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...