×

நாகை அருகே பயங்கரம் காரில் கடத்த முயன்றபோது தப்பிய பெண் சாவு: மர்ம கும்பலை பிடிக்கக்கோரி காவல் நிலையம் முற்றுகை

தரங்கம்பாடி: நாகை மாவட்டம் தரங்கம்பாடி கேசவன்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான மதியழகன் மகள்கள் கவியரசி (21), கலையரசி (19). இருவரும் பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் உள்ள ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த இவர்கள் கடந்த 6ம் தேதி இரவு இப்பகுதியை சேர்ந்த 5 பேருடன் பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர். இரவு 9.45 மணியளவில் கேசவன்பாளையத்தில் இருந்து 500மீ தூரத்தில் உள்ள தரங்கம்பாடி பஸ்நிலையத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றனர். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் கவியரசியை கடத்த முயற்சித்தனர். கவியரசி அவர்களுடன் போராடினார். சாலையிலேயே அவரை சிறிது தூரம் தரதரவென அக்கும்பல் இழுத்துச்சென்றது. அவரது தங்கை கலையரசி அவரை காப்பாற்ற முயன்றபோது அவரும் படுகாயமடைந்தார்.  உடனே இருவரையும் அந்த கும்பல் விட்டுவிட்டு தப்பிசென்றது. இதில் படுகாயமடைந்த இருவரையும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலையரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

கவியரசியை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவியரசி இறந்தார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விபத்து மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி பொறையார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார், 2 நாளில் குற்றவாளியை பிடித்து விடுவதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



Tags : Nagai ,gang ,siege , Nag,smuggle, car, Survivor, death
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு