×

பெருமாள் சிலை பயணத்தில் தொடரும் சிக்கல் திடீர் வெள்ளத்தில் மண்பாலம் அடித்து செல்லப்பட்டது

ஓசூர்: தமிழகத்தை கடந்து பிரமாண்ட பெருமாள் சிலை கர்நாடகா செல்வதற்கு தேவையான ஆயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டு வரும் மண்பாலம், திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் சிலை பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவுவதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கொரக்கோட்டை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 350 டன் எடை, 64 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பல்வேறு தடைகளை தாண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மண்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்த மண்சாலை உறுதியானதாக உள்ளதா என பொறியாளர்கள் ஆய்வு செய்த பின்பு, ராட்சத லாரியுடன் பிரமாண்ட பெருமாள் சிலையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியான நந்திமலை உள்ளிட்ட இடங்களில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்ததால், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதையடுத்து, அணைக்கு வந்த தண்ணீர் நள்ளிரவு நேரத்தில் அப்படியே தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், பெருமாள் சிலை பயணத்திற்காக பேரண்டப்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மண்பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனைக்கண்டு நேற்று காலை சிலை ஏற்பட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனிடையே பேரண்டப்பள்ளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிலையை, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து வழிபட்டு செல்கின்றனர்.



Tags : Perumal ,flooding , Perumal, idol , problem, Sudden, flooding
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்