×

சோழவந்தான் அருகே பல்லாங்குழி சாலையால் பொதுமக்கள் கடும் அவதி: அதிகாரிகள் வேடிக்கை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நெடுங்குளம் ரயில்வே கேட் முதல் தச்சம்பத்து வரையிலான சாலை குண்டும், குழியுமாய் போக்குவரத்துக்கு பயனற்று  இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், வாடிப்பட்டி சாலையிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு  மாற்றுப்பாதையாக நெடுங்குளம் ரயில்வே கேட் வழி சாலை உள்ளது. இச்சாலையில் ரயில்வே கேட் முதல் தச்சம்பத்து கிராமம் வரையிலான சுமார் 2  கி.மீ சாலை முற்றிலும் குண்டும், குழியுமாக சேதமடைந்து   போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது.

சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாடிப்பட்டி சாலையில் இருப்பதால், சோழவந்தான் பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புற  கிராமங்களுக்கு செல்ல வேண்டிய 30க்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த மாற்றுப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். இச்சாலையில் சிரமத்துடன்  பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள் பல நேரம், தச்சம்பத்திலிருந்து சுமார் 4 கிமீ தூரம் சோழவந்தான் வராமல், நேரமின்மையால்   அப்படியே மதுரை,  திருமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்.
இரவு கடைசி டிரிப் வரும் சில பஸ்களும் தச்சம்பத்திலேயே சோழவந்தான் வரும்      பயணிகளை இறக்கி விட்டு, வேறு பஸ் மாறி செல்லுமாறு  கூறுகின்றனர்.
சாலையை சீரமைக்க கோரி பல முறை கோரிக்கை வைத்தும் பயனில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘இச்சாலை ரயில்வே பாலப்பணிகளுக்கான மாற்றுப் பாதையாக அறிவித்ததோடு சரி. அதற்குரிய தரமான  சாலை போடவில்லை. லாபத்தை மட்டுமே குறி வைத்து நல்ல நிலையில் இருக்கும் சாலைகளைக்கூட சீரமைத்து, அதற்கு மேல் புதிய சாலை  போடுகின்றனர். ஆனால் முற்றிலும் சேதமடைந்த இச்சாலையை சீரமைத்து புதிய சாலை போட பலமுறை கோரிக்கை வைத்தும்  நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் இச்சாலையில் அடிக்கடி விபத்தால், உயிரிழப்புகள் நடந்து வருகிறது. எனவே மாவட்ட  ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். 


Tags : Pallanguri Road ,Cholavanthan , People suffering from Pallanguri Road near Cholavanthan: Officials Fun
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’