×

குடிநீரை முறைகேடாக உறிஞ்சுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: குடிநீரை முறைகேடாக உறிஞ்சும் லாட்ஜ், திருமண மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகரின் மக்கள் தொகை சுமார் 1.50 லட்சம். இதுதவிர மருத்துவம்,  ஆன்மிகம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றுக்காக வேலூரில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டுகிறது.  இவர்கள் அனைவருக்கும் சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை மாநகராட்சி செய்து தருகிறது.  மாநகரின் குடிநீர் தேவையை ஒகேனக்கல்  கூட்டுக்குடிநீர், பாலாறு, பொன்னை கூட்டு குடிநீர், ஓட்டேரி போன்ற திட்டங்கள் மூலம் நிறைவு செய்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்  நடைமுறைக்கு வந்த பிறகு ஓரளவுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

தற்போது 6 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் என்று சுழற்சி முறையில்  குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு  வழங்கப்படும் குடிநீரை மோட்டார் மூலம் சிலர் உறிஞ்சுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது  இந்த நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர்கள் சுணக்கம் காட்டுவதால் பல பகுதிகளில் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள்  புகார் தெரிவிக்கின்றனர். வேலூரில் தனியார் நிறுவனங்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில், மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுகிறது.  இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, மெயின் பஜார், பிடிசி ரோடு, ஜெயராம செட்டித்தெரு, காந்தி ரோடு, பேரிப்பேட்டை, பாபுராவ் தெரு,  மிட்டா ஆனந்தராவ் தெரு, சுக்கையாவாத்தியார் தெரு, சத்துவாச்சாரி என பல பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் தங்கியுள்ளனர்.

இதற்காக இங்கு  லாட்ஜ்களும், வீடுகள் என்ற ெபயரில் தங்கும் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.இங்கு மோட்டார் மூலம் முறைகேடாக மாநகராட்சி குடிநீர்  உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதுதவிர மேற்கண்ட இடங்களில் பொதுக்குழாய்களிலும் தனியாக பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பைப்புகளை பொருத்தி மோட்டார் மூலம் குடிநீரை  உறிஞ்சுகின்றனர். இதனால் பொதுக்குழாய்கள் மட்டுமின்றி வீட்டுக்குழாய் இணைப்பை பெற்றுள்ள பொதுமக்களும் போதிய குடிநீர் கிடைக்காமல்  தவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.  இதுஒருபுறம் என்றால் பரவலாகவே தெருக்களில் உள்ள பொதுக்குழாய்களிலேயே அருகில் உள்ள வீடுகளை  சேர்ந்தவர்கள் பைப்புகளை பொருத்தி மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதுபற்றி தகவல் கிடைக்கும்பட்சத்தில் மாநகராட்சி அதிகாரிகள்  வீடுகளில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சப்படும் மின்மோட்டார்களை பறிமுதல் செய்கின்றனர்.

ஆனால் அதிகளவில் குடிநீர் உறிஞ்சும் திருமண மண்டபம், ஹோட்டல், லாட்ஜ்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதில்லை என்றும்,  பொதுக்குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுபவர்களையும் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோடையின் தாக்கம்  அதிகரித்துள்ள நிலையில் மாநகராட்சியால் வினியோகம் செய்யப்படும் குடிநீரையும் சாதாரண மக்களுக்கு கிடைக்காமல் உறிஞ்சி எடுக்கும் நிலைக்கு  முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.13 ஆயிரம் அபாரதம்:  வேலூர் மாநகராட்சியில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வந்தால் அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் ₹13 ஆயிரம் அபாரதம்  வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Drinking water, officials, civilians
× RELATED கிருஷ்ணகிரி அடுத்த பெரியபனமுட்லு...