×

நாகர்கோவில் குடிநீருக்கு திறந்துவிடப்படும் அனந்தனார் சானலில் தண்ணீர் திருட்டு: மோட்டார் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் குடிநீருக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் திருடப்பட்டது தொடர்பாக ஒரு ெபரிய மோட்டாரை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாகர்கோவில் மாநகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி உயரம் கொண்ட இந்த அணை தண்ணீர் மாநகர மக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே தட்டுப்பாட்டை சமாளிக்க புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது முக்கடல் அணையில் நீர் மட்டம் மைனஸ் அளவில் தான் உள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் பெற்று, தற்போது 12 நாள் முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

 மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என கூறி இருந்தனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முக்கடல் அணைக்கு வரும்போது 40 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. குறைந்த அளவு தண்ணீர் வருவதால் மின் மோட்டார் மூலம் இவற்றை பம்பிங் செய்வதில் சிக்கலும் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே அனந்தனார் சானலில் குடிநீருக்காக வரும் தண்ணீரை வழியோர கிராமங்களில் உள்ள சிலர் தங்களது தோட்டத்துக்காக இரவு நேரங்களில் மோட்டார் மூலம் திருடுகிறார்கள். இதனால்  தண்ணீர் முக்கடல் பகுதிக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் அனந்தனார் சானலில் பல இடங்களில் பாசி படர்ந்து கிடக்கிறது. இதுவும் தண்ணீரின் வேகத்தை குறைக்கிறது. இந்த பாசிகளை அகற்ற  மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அனந்தனார் சானலில் உள்ள பாசிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனந்தனார் சானலில் தண்ணீர் திருடுபவர்களை தடுக்க கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பணி மேற்வார்வையாளர் ராஜா மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுருளோடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அனந்தனார் சானலில் இருந்து பெரிய மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்தனர். இந்த தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்தவர்கள் மோட்டாரை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். அதிகாரிகள் அந்த மோட்டரை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுபோல் தண்ணீரை திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கொடுக்க பேச்சிப்பாறை, அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து 150 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் கேட்டுள்ளோம். தற்போது பேச்சிப்பாறையில் 1.15 அடி தண்ணீர் உள்ளது.

 அணையில் இருந்து 62 கன அடிதண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அனந்தனார் சானலில் பாசிகள் மற்றும் தண்ணீர் திருட்டு நடப்பதால், முக்கடல் அணைபகுதிக்கு 40 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. பேச்சிப்பாறை அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் முக்கடல் அணைக்கு கொண்டுவரும் முயற்சியில் அனந்தனார் சானலில் உள்ள பாசிகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சில விவசாயிகள் சானலில் தண்ணீரை மறித்து, விவசாயத்திற்கு எடுத்து வருகின்றனர். அதனையும் தடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார் மூலம் தண்ணீர் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Ananthar Channel ,Nagarcoil , Nagarcoil, drinking water, Ananthar Channel, water theft, motor
× RELATED நாகர்கோவில் - நெல்லை பயணம் கண்டக்டர்...