×

கோடை காலத்தில் தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு

* கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி

நெல்லை : தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்தடை அமலுக்கு வந்தது. காலை முதல் நள்ளிரவு வரை பல பகுதிகளில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ப போதிய மின்உற்பத்தி இல்லாததால் தனியாரிடமும் மின்சாரம் கொள்முதல் செய்து சமாளிக்கின்றனர்.

தற்போது கோடை வெயில் உச்சமடைந்துள்ளதால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் நீர் மின் உற்பத்தி முடங்கியுள்ளது. காற்றாலை மின்சாரமும் கைகொடுக்கவில்லை. அக்னி நட்சத்திர வெப்பம் காரணமாக இந்த மாதம் மின் நுகர்வு மேலும் அதிகரித்துள்ளது.  ஏசி, ஏர்கூலர், ஏர் பேன், மின்விசிறி, பிரிட்ஜ் போன்றவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது.

 அக்னி நட்சத்திர கத்திரி வெயில் தமிழகத்தில் திருத்தணி, வேலூர் பகுதிகளில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை பதிவாகிறது. பிற முக்கிய நகரங்களில் 105 டிகிரிக்கு குறையாமல் வெப்பம் தகிக்கிறது. இதனால் ஏசி வசதி உள்ளவர்கள் அதனை 24 மணி நேரமும் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவும் மின்நுகர்வு வேகமாக உயர்ந்துவருகிறது. ஏற்ெகனவே உள்ள மின்உற்பத்தி நுகர்வுக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறையாக இருந்த நிலையில் தற்போது மேலும் நுகர்வு அதிகரித்துள்ளதால் மின்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக சீரான மின் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இது நேற்றுமுன்தினம் கட்டுக்கடங்காமல் சென்றது. மின்நுகர்வு கடுமையாக உயர்ந்ததால் தமிழகத்தின் பலபகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே   6 மணிக்கு மேல் மின் விநியோகத்தை பகுதிவாரியாக நிறுத்த மின் வாரியத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.  இதனால் நேற்று முன்தினம் இரவே மின் வெட்டு அமலுக்கு வந்தது. நேற்று பகலில் மின்தடை ஏற்படுவதும் மின்சாரம் வருவதுமாக கண்ணாமூச்சி காட்டிவந்தது.

நெல்லை மாநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை பல இடங்களில் தலா 1 மணி நேரம் வீதம் மின்தடை சுழற்சி முறையில் ஏற்பட்டது. சிறிய நகர்பகுதிகளில் இந்த நிலை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் ஏற்கனவே புழுக்கத்தில் தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் மேலும் அவதிப்பட்டனர். குறிப்பாக வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் அதிக சிரமப்பட்டனர். ஏசியில் இருந்து பழகியவர்களுக்கு 1 மணி நேர மின்தடை அதிக மனஉளைச்சலை கொடுத்தது. பல தொழில் நிறுவனங்களும் அடிக்கடி ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிக்கலை சந்தித்தன.

இதுகுறித்து மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மைதான். மின்தடை ஏற்படாமல் முடிந்தவரை சமாளிக்கிறோம். கடந்த வாரத்தில் ஒருசில நாட்கள் காற்றாலை மின் உற்பத்தி சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட்டை தொட்டது. இது நீடிக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே சீரற்ற காற்றாலை மின் விநியோகமே உள்ளது. நேற்றைய சராசரி காற்றாலை மின்உற்பத்தி 652 மெகாவாட் என்ற அளவிலேயே இருந்தது. வழக்கமாக ஜூன் இறுதியில் காற்றாலை மின் உற்பத்தி கைகொடுக்கும். எனவே முன்னதாக காற்று வீசத் தொடங்கினால் மட்டுமே கூடுதல் மின்நுகர்வை சமாளிக்கமுடியும். ஆயினும் தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக மின்தட்டுபாடை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.

Tags : Tamil Nadu , Power cut, tamil nadu, summer,tirunelveli
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...