×

ஆம்பூர் அருகே வாழ்விடங்களுக்கு வந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை

ஆம்பூர் :  ஆம்பூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களின் வாழ்விடங்களில் சிறுத்தைகள் புகுந்து கால்நடைகளை கொன்று தின்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர் இதனால் அவர்கள் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆம்பூர் வனச்சரகத்தில் ஆந்திராவின் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ள காரப்பட்டு காப்புக்காடுகள், துருகம் காப்புக்காடுகள், ஊட்டல் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகள் சில வசித்து வருகின்றன. முதலில் சிறுத்தைகள் இப்பகுதியில் இல்லை என வனத்துறையினர் மறுத்து வந்த நிலையில் இதற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி ச உறுதியானது.

தற்போது இந்த சிறுத்தைகள் இனப்பெருக்கம் செய்து குட்டிகளை ஈன்றுள்ளதால் இவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அபிகிரிப்பட்டரை, பொன்னப்பல்லி, மலையாம்பட்டு, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, சுட்டக்குண்டா, பைரப்பள்ளி, பெங்களமூலை போன்ற பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து சிறுத்தை வேட்டையாடி வருகிறது.

ஆரம்பத்தில் வனப்பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டி சென்றால்  சிறுத்தை வேட்டையாடி வந்தது. இதனால் கால்நடை மேய்ப்போர் காடுகளுக்குச் சென்று தங்கள் கால்நடைகளை வைப்பதை அடியோடு நிறுத்திவிட்டனர். இதனால் போதிய உணவு இன்றி தவிக்கும் இந்த சிறுத்தைகள் தற்பொழுது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி பகல் நேரத்திலேயே வந்து செல்கின்றன.

அவ்வாறு வரும் இந்த சிறுத்தைகள், வெள்ளாட்டு கொட்டகைகள், மாட்டு தொழுவங்களுக்கு வந்து கால்நடைகளை தூக்கி செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு வெங்கடேசன் ஆட்டுப்பட்டியில் நுழைந்த இரண்டு சிறுத்தைகள் 2 ஆடுகளை தூக்கி சென்றதை அங்கிருந்த சிலர் கண்கூடாக பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அபிகிரிப்பட்டறை  கலைஞர் நகரை சேர்ந்த குண்டோடன் (எ) ராஜகோபால் (56) என்பவர் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அருகிலுள்ள புல்வெளிக்கு ஓட்டி சென்று உள்ளார்.  அப்போதுமறைவில் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை நிறைமாத சினை ஆடு ஒன்றை தூக்கி சென்று உள்ளது. அதிர்ச்சியில் உறைந்து போன குண்டோடன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஊருக்குள் ஓடி வந்து பொது மக்களிடம் கூறி உள்ளார்.

தொடர்ந்து ஊருக்கே வந்து சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி வருவதால் கால்நடை மேய்ப்போரும், வெள்ளாடுகளை வளர்ப்போரும் அச்சத்தில் உள்ளனர்.சிறுத்தைகளுக்கு பயந்து வெள்ளாடு வளர்ப்போர் கிடைத்த காசுக்கு லாபம் என கருதி தாங்கள் ஆர்வத்துடன் வளர்த்து வந்த வெள்ளாடுகளை கும்பல் கும்பலாக விற்க துவங்கி உள்ளனர்.
வெள்ளாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்த ₹20 ஆயிரம் மதிப்பில் நான்கு வெள்ளாடுகளும், அதை அடைத்து வைக்க ₹7 ஆயிரம் ஆட்டு கொட்டகை அமைக்க மானியமும் அரசு வழங்கி வருகிறது.

சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் அரசின் இலவச வெள்ளாடுகளை பெற்ற பயனாளிகள் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே வனத்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நீண்ட காலம் ஆகியும் இதுவரை அவர்களுக்கான இழப்பீடு எதுவும் வழங்கவில்லை எனவும் அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து உரிய நடவடிக்கையை கிராம மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து சிறுத்தை பயத்தால் தூக்கத்தை தொலைத்து வாழ்ந்து வருகின்றனர்.

Tags : neighborhood ,Ambur , Ambur ,Leopard ,Village ,goats ,forest area
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...