×

வேலூர் மாவட்டத்தில் 2வது பெரிய அணையின் அவலம் 30 ஆண்டுகளாக கைவிடப்பட்ட ராஜா தோப்பு அணை

*  தண்ணீரின்றி பாலைவனமாக மாறியது
* விவசாயிகள் ஏமாற்றம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 2வது பெரிய அணையாக இருக்கும் ராஜாதோப்பு அணை 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. ‘நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு’ நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது. தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது. உலகத்தில் உள்ள நீரில் 3 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீர். இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும். இதிலும் 2 சதவீதம் தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது.

வெறும் 1 சதவீதம் தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது. இப்படி கிடைக்கும் தண்ணீரைதான் நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இப்படியே சென்றால் வரும் காலங்களில் தண்ணீர் கிடைக்காமல் மாத்திரைகளை போல சாப்பிட  வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம். தமிழகத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் 66 அணைகள், தமிழ்நாடு மின்சார வாரியம்  மின்உற்பத்திக்காக 38 அணைகள் என 104 அணைகள் உள்ளன. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளாமல்  வேலூர் மாவட்டத்தின் 2வது பெரிய அணை பராமரிப்பின்றி முடங்கி கிடக்கிறது.

தமிழக- ஆந்திரா எல்லையில் உள்ள மலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையிலும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் வகையிலும், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாதோப்பில் அணை கட்டப்பட்டது. கடந்த 1991ம் திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த அணை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த புதிதில் விவசாயிகளிடமும், காட்பாடி வட்டார மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

அதாவது அணை கட்டிய சில ஆண்டுகளில் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. அதேபோல் சுற்றுலா தலமாகவும் ராஜாதோப்பு அணையும் அதை சார்ந்த பூங்காவும் உருவாகியது. விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதவாது குழந்தைகள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா அமைக்கப்ட்டு இருந்தது. இயற்கை சூழ்ந்த மலைப்பகுதிகளின் நடுவே அணை அமைந்துள்ளது. இந்த அணை இதுவரை 7 முறைக்கு மேல் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் லத்தேரி உட்பட 5 ஏரிகளுக்கு சென்று சேரும்.

மேலும் கோடைகாலத்தில் அந்தபகுதியில் உள்ள விவசாயப்பணிகளுக்காகவும், குடிநீர் பிரச்னையை போக்கவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். போதுமான தண்ணீர் இல்லை என்று காரணத்தை கூறி தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அணை நிரம்பும்போது மட்டும் கண்துடைப்புக்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தி விட்டு சென்றுவிடுவார்கள்.

கடந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழை ேபாக்கு காட்டியதால் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த மழை குறைவு காரணமாக  24.57 அடி உயரம் கொண்ட ராஜாதோப்பு அணையில் தற்போது ஒருசொட்டு தண்ணீர்கூட இன்றி நீர்ப்பிடிப்பு பகுதி பாளம், பாளமாக வெடித்து கிடக்கிறது. இதற்கு அணை முழுமையாக தூர்வாரப்படாததே காரணம்.

நீர்ப்பிடிப்பு பகுதி, கரைகள் பாதுகாப்பு, அணையின் உறுதி  தன்மை, நீர்ப்பிடிப்பு பகுதியில் தேங்கிய மணலை அப்புறப்படுத்தாது,  அணையில் தண்ணீர் கசிவு, அணையின் அடிப்பகுதியில் மண் அரிப்பு, அணையில் உள்ள மதகுகள், தண்ணீர் வழிந்தோடிகள் என அணையை  முழுமையாக ஆய்வு செய்து அவற்றை சீரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை  மேற்கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் மழை பெய்யும் காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமிக்கப்படுவதுடன், இப்பகுதியின் விவசாய தேவையை பூர்த்தி செய்ய முடிவதுடன், நிலத்தடி நீராதார பெருக்கத்துக்கும் உதவும் என்கின்றனர் விவசாயிகள்.

 களை இழந்த பூங்கா

 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணையை சுற்றி பார்க்க முன்பு குடும்பத்துடன் வருவார்கள். அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு, பொழுது போக்கி விட்டுச் சென்றனர். அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பூங்காவும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாமல்  பூங்கா இருந்த இடமே தெரியாத வகையில் உள்ளது. கிராம சூழலுடன், மலைகள் சூழ்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளித்த ராஜாதோப்பு அணைப்பகுதியை மேம்படுத்த வேண்டிய பொதுபணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

alignment=


ராஜாதோப்பு பராமரிப்புக்கு திட்ட அறிக்கை என்னவானது?

ராஜாதோப்பு அணை தொடர்பாக பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு குடியாத்தம் பகுதி உதவி பொறியாளர் கோபியிடம் கேட்டபோது, ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ₹90 லட்சம் மதிப்பில் ராஜாதோப்பு அணை மேம்பாட்டுக்கு என திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்னும் நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. கிடைத்ததும் ராஜாதோப்பு அணை பொலிவு பெறும்’ என்றார்.

அணைகள், ஏரிகள் தூர்வார வேண்டும் விவசாயிகள் சங்க நிர்வாகி பேட்டி


விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முல்லை கூறியதாவது: வேலூர்  மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு, மோர்த்தனா, அண்டியப்பனூர் ஆகிய அணைகளை  உடனடியாக தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாத காலத்தில்  தூர்வாரினால் தான் மழைக்காலங்களில் நன்றாக சேமித்து வைக்க முடியும்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலாற்றில் மணல் அள்ளுவதில் மட்டுமே  குறிக்கோளாக கொண்டு உள்ளனர். அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அணைகள்  மற்றும் 519 ஏரிகளை தூர்வாருவதில் கவனம் செலுத்தினால் குடிநீர் பஞ்சமும்,  பாசனத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடது. அதேபோல் அணைகள் வரும் தண்ணீரை  நேரடியாக ஏரிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வேலூர்  மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டும், இதுவரை எந்த ஒரு நிவரண  பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும்  கண்டுக்கொள்ளவில்லை. மாவட்டத்தில் தற்போது கடுமையான குடிநீர்  தட்டுப்பாடும், பாசன வசதிக்கு தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகிறது. எனவே  அணைகள் மற்றும் ஏரிகள் கால்வாய்களை தூர்வார உரிய நடவடிக்கை மேற்கொண்டால்  மட்டுமே அடுத்த ஆண்டில் நமக்கு குடிக்க குடிநீர் கிடைக்கும்.

Tags : dam ,Raja Thopp ,Vellore district , Raha thopu dam, vellore district, no water, heavy drought, rain
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...