×

விழிப்புணர்வு இல்லாததால் தொடரும் விபரீதம் குழந்தைகள் விற்பனை மையமாக மாறிய கொல்லிமலை கிராமங்கள்

* பெண் சிசு என்றாலே வெறுக்கும் பெற்றோர்
*  வறுமையை குறிவைத்து வலம்வரும் புரோக்கர்கள்


நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குழந்தைகள் விற்பனை மையமாக மாறியதற்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம். இதனால் வறுமையை குறிவைத்து வலம் வரும் புரோக்கர்கள், சொற்ப தொகைக்கு குழந்தைகளை வாங்கி, லட்சங்களில் லாபம் ஈட்டும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.  
தொழில்வளமும், மண்வளமும் நிறைந்த கொங்கு மண்டலத்தில் முக்கிய மாவட்டம் நாமக்கல். இங்குள்ள ெகால்லிமலை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. அதே நேரத்தில் கொல்லிமலை என்று சொன்னவுடன் திகிலூட்டும் மர்மபிரதேசம் என்று திகைப்பவர்களும் உண்டு.

alignment=


இது ஒரு புறமிருக்க சமீபகாலமாக கொல்லிமலை என்ற பெயர், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குளிர்காற்று வீசும் இங்குள்ள கிராமங்கள், குழந்தை விற்பனை மையங்களாகவும் திகழ்ந்து வருகிறது என்பதே இந்த அதிர்வுக்கு காரணம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற அமுதவள்ளி என்பவர், குழந்தைகள் விற்பனை தொடர்பாக பேசிய ஆடியோ ஒன்று, கடந்த மாதத்தில் வைரலானது.

இது குறித்து ராசிபுரம் தனிப்படை போலீசார், நடத்திய விசாரணையில் கொல்லிமலை கிராமங்களில் இருந்து குழந்தைகளை சொற்ப தொகைக்கு அவர்வாங்கி, லட்சங்களில் விற்று லாபம் பார்த்ததும், இதற்காக முக்கிய நகரங்களில் பெண்களையே புரோக்கர்களாக நியமித்திருந்ததும் தெரியவந்தது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை குறிவைத்தே இந்த வியாபாரம் நடந்திருப்பது மேலும் திகிலூட்டியது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், பெண்ணிய அமைப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் ஆய்வு செய்ததில், குழந்தை விற்பனையின் பின்னணியில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை. இங்கு குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, சேளூர்நாடு என்றிருந்த 14 நாடுகள், தற்போது ஊராட்சிகளாக மாறிவிட்டது. 250 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

80 ஆயிரம் மலைவாழ்மக்கள் வசித்து வருகிறார்கள். விவசாயமே இங்கு பிரதான தொழில். ஆனால், பெரும்பாலான  கிராமங்களில் இன்றுவரை அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அரசியல் கட்சிகளின் கவனமும் தேர்தல் நேரத்தில் மட்டுமே கொல்லிமலையின் பக்கம் இருந்துள்ளது. இதனால், இங்கு என்னதான் நடக்கிறது என்று கண்டறியவோ, அல்லது அங்குள்ள மக்களின் துயர் துடைக்கவோ யாருமில்லை என்பது அடிப்படை உண்மை என்கின்றனர் அவர்கள்.

மேலும், குழந்தைகளை விற்பனை செய்தீர்களா? என்ற கேள்விக்கும் அவர்களிடம் எந்த பதற்றமும் இல்லை. ‘‘இது ஒன்றும் எங்க ஊருக்கு புதுசில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும், ஒரு தம்பதிக்கு 2 குழந்தைகளுக்கு மேல் பிறந்தால், அதை குழந்தையில்லாத உறவினர்களுக்கு இலவசமாக தத்துக் கொடுத்து விடுவோம். இது ஆண்டாண்டு காலமாக இருக்கும் வழக்கம். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றாலே, வெறுப்பை உமிழும் பெற்றோரோ, இங்கு அதிகமாக உள்ளனர். பெண் குழந்தைகளை பொறுத்தவரை, அவை காடு, மலை என்று எங்களிடமிருந்து கஷ்டப்படுவதை விரும்பமாட்டோம். வளர்க்க ஆசைப்படும் யார் கேட்டாலும் இலவசமாக கொடுத்து விடுவோம். எப்படியாவது அந்த குழந்தைகள், ஒரு நல்லநிலைக்கு வந்து உயர்ந்த இடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையே அதற்கு காரணம் என்பது அதற்கு பெற்றோர் கூறும் காரணம்.

ஆனால், நாங்கள் பணத்துக்காக சமீபகாலமாக கொல்லிமலையில் குழந்தைகள் விற்பனை என்று கூறுவது எங்களை அவமதிப்பதை போல் உள்ளது என்றும் குமுறியுள்ளனர் மலைவாழ் மக்கள். இதிலிருந்தே அங்குள்ள மக்கள், அறியாமை இருளில் மூழ்கி கிடக்கின்றனர் என்பது அம்பலமாகியுள்ளது. விழிப்புணர்வு இல்லாதவர்களை வறுமையும் துரத்துகிறது.

அதே நேரத்தில் மூளைச்சலவை செய்யும் புரோக்கர் கும்பலும் நெருங்குவதால், குழந்தை விற்பனை என்ற அவலத்திற்கு தொடர்ந்து ஆட்பட்டுள்ளனர் என்பதே முற்றிலும் உண்மை என்பதும், கொல்லிமலையில் ஆய்வு நடத்திய சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள வேதனை தகவல். மலைவாழ் மக்களிடமிருந்து உதிர்ந்த கனிகளை வாங்குவதை போல் புரோக்கர்கள், குழந்தைகளை வாங்குகின்றனர். அதை நகரங்களுக்கு விற்று லட்சங்களில் லாபம் ஈட்டுகின்றனர்.

இப்படி விற்கப்படும் குழந்தைகளுக்கு பிறப்பு உள்ளிட்ட அனைத்தையும் வழங்க, உயரதிகாரிகளும் தயார் நிலையில் இருந்துள்ளனர். இதனால் ஆண்டாண்டு காலமாக இந்த அவலம் அரங்கேறியுள்ளது. எனவே, இந்த வில்லங்கத்திற்கு தீர்வு காணவேண்டுமானால் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை, அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் ேகாரிக்கையாக உள்ளது.

Tags : villages ,children ,sales center , Kollimalai ,children sale,no Awarness
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு