×

கோடை விடுமுறையால் குலுங்கும் கொடைக்கானல்

*  சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
* போக்குவரத்து நெரிசலால் அவதி

கொடைக்கானல் :  கோடை, வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து, கடந்த 3 வாரங்களாக சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நேற்று வார விடுமுறையை கொண்டாடவும் ஏராளமானோர் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.

இதனால் மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர் ராக், கோக்கர்ஸ் வாக், தற்கொலை முனை, பைன் பாரஸ்ட் போன்ற தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. தவிர ஏரியில் படகுசவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் மற்றும் டூவீலர் ரைடிங் செய்து வருகின்றனர். கொடைக்கானலில் காலை மிதமாக வெயில் தென்பட்டாலும் அவ்வப்போது மேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் கொடைக்கானல் முழுவதும் கோடைசீசனை வரவேற்கும் விதமாக குளுமையாக காணப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் கொடைக்கானல் நோக்கி ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் படையெடுப்பால், பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் 2 மணிநேரம் காத்திருந்து சென்றதால்  சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில், ‘‘வரும் காலங்களில் கோடை விழா, மலர் கண்காட்சி வரவுள்ளதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். எனவே மாவட்ட எஸ்பி, கொடைக்கானலில் போக்குவரத்தை சீர்செய்ய கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும்’’ என்றனர்.


Tags : Kodaikanal ,summer vacation , summer, kodaikanal, tourist, gathered in large numbers
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்