×

ராமநாதபுரம் மாவட்டத்தை தொடர்ந்து தண்ணியில்லா காடாகிறது சிவகங்கை

*அழிவின் விளிம்பில் ஆறுகள், கண்மாய்கள்
*பாசனம், குடிநீருக்கு தண்ணீரின்றி பரிதவிப்பு

சிவகங்கை : ராமநாதபுரம் மாவட்டத்தை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கண்மாய்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் பாசனம், குடிநீருக்கு தண்ணீரின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே ‘தண்ணியில்லா காடு’ என்பார்கள். பின்னர் திமுக ஆட்சியின்போது கொண்டு வந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை கட்டுக்குள் வந்தது. இருப்பினும், மழைவளம் பாதித்ததால் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது சிவகங்கை மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.

377 கிமீ பரப்பில் ஆறுகள் :


சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான ஆறுகள் உள்ளன என்றால், பலரும் ஆச்சரியத்தோடு பார்க்கும் அளவிற்கு ஆறுகள் இருந்த தடமே இல்லாமல் அழியும் நிலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாலாறு, சருகணியாறு, நட்டாறு கால்வாய், வைகையாறு, உப்பாறு, பாம்பாறு, தேனாறு, விருசுழியாறு என 9 ஆறுகள் உள்ளன. வைகையாறு மூல வைகையிலும், மணிமுத்தாறு, விருசுழியாறு, பாலாறு, தேனாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு கோட்டக்கரையாறு மூலமாகவும் உள்ளன. ஆற்றின் நீளம் குறைந்தபட்சம் 20 கி.மீ முதல் அதிகபட்சம் 62 கி.மீ வரை உள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் சுமார் 377 கி.மீ பரப்பளவில் இந்த ஆறுகள் பரந்து விரிந்துள்ளன.

வைகை நீர் மட்டும்...:

பெயரளவில் 9 ஆறுகள் இருந்தாலும் இவைகள் அனைத்தும் தற்போது தேடப்படும் நிலையிலேயே உள்ளன. இதில் வைகையாறு மட்டுமே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படும்போது, சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வரை நீர் செல்கிறது. மற்ற ஆறுகள் அனைத்தும் முற்றிலும் அழியும் நிலையிலேயே உள்ளன. இந்த ஆறுகள் மூலமாகவே விவசாய கண்மாய்களுக்கான நீராதாரம் முழுமையாக கிடைத்து வந்தது.

alignment=


இந்த 9 ஆறுகளில் பெரும்பாலானவை கண்மாய்களில் தொடங்கி ஒரு ஆற்றுடன் மற்றொன்று சேரும் வகையில் உள்ளன. கண்மாய்கள் நிறைந்தாலும் ஆற்றின் மூலம் பிற கண்மாய்களுக்கு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில ஆறுகள் மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடங்குகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணைகள், சிறிய அணைகள், பாலங்கள், தரைப்பாலங்கள், மடைகள், கலுங்குகள் என நீர் முற்றிலும் வீணாவதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கும், கண்மாய்களுக்கும் இடையே பல்வேறு கட்டுமானப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

மணல் மாபிக்களால் சிக்கல்...:

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களுக்கு ஆற்று வழியே நீர் வழிப்பாதைகள், பாசன கட்டமைப்பு வசதிகள் முன்னோர்களால் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் ஆறுகளில் பல மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டு பெரும் பள்ளங்களாக காட்சியளிக்கிறது. புதர்கள், சீமைக்கருவேல மரங்கள் முளைத்து நீர் வழிப்பாதைகள் இல்லாமல் போனதால், ஆறுகள் அனைத்தும் அடையாளமே இல்லாமல் அழிந்து வருகின்றன.

ஆத்துக்குள் அதிக ஆழத்தில் போர்...:


சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட வைகையாற்றில் சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் 120 குடிநீர் திட்டங்கள் உள்ளன. இதில் தற்போது 56 திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. ஆற்றில் இருந்த நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் மணல் அள்ளப்பட்டதால் குறைந்துவிட்டது. தற்போது ஆற்றுக்குள் சுமார் 350 அடி ஆழத்திற்கும் அதிகமாக போர் போட்டால்தான் நீர் கிடைக்கிறது. இதனால் குடிநீர் விநியோகத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பங்கு நீர் மட்டுமே...:

சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்கென ஆண்டுதோறும் வைகையில் நீர் திறப்பது கிடையாது. விவசாயத்திற்கான பங்கு நீர் மட்டுமே தரப்படுகிறது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கண்மாய்கள் 968, ஒன்றிய கண்மாய்கள் 4,871 மற்றும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. சுமார் 1 லட்சத்து 5ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7 மி.மீ. 2008 முதல் 2018ம் ஆண்டு வரை இடைப்பட்ட 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1,283 மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். 2012ம் ஆண்டு 549 மி.மீ மழை பெய்ததே இந்த 9 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவில் பெய்த மழை அளவாகும்.

மழை நீரை நம்பியே...:

2009ம் ஆண்டு 772 மி.மீ, 2010ம் ஆண்டு 916 மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ, 2014ம் ஆண்டு 920மி.மீ, 2015ம் ஆண்டில் 1,097 மி.மீ, 2016ம் ஆண்டு 706.5 மி.மீ, 2017ம் ஆண்டு 976.6மி.மீ, 2018ம் ஆண்டில் 924.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆனால் அனைத்து ஆண்டுகளிலுமே தொடர்ச்சியாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீத விவசாயம் மழை நீரை மட்டுமே நம்பி கண்மாய் பாசனம் மூலமே செய்யப்பட்டு வருகிறது. சராசரி மழை பெய்தும் விவசாயம், குடிநீர் பாதிப்பிற்கு நீர் வரத்து கால்வாய், நீர்ப்பிடிப்பு பகுதிகள், கண்மாய், குளங்கள் பராமரிப்பின்றி போனதே காரணம். 25ஆண்டுகளுக்கு முன்வரை சரிவர பராமரிக்கப்பட்டு வந்தவை பின்னர் போதிய பராமரிப்பின்றி போனது.

நீர்வரத்து பாதிப்பு :

பெரும்பாலான நீர்வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், மடைகள் என அனைத்துமே பராமரிப்பின்றி உள்ளன. நீர் வரத்து கால்வாய்கள், அதன் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் உள்ளிட்டவை சரியான முறையில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே கண்மாய்கள் காப்பாற்றப்படும். இதுபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மிக முக்கியமானதாகும். இப்பகுதிகள் மூலமே கண்மாய்களில் சேர வேண்டிய முழுமையான நீர் கால்வாய் வழி சேரும். ஆனால் இவைகள் பராமரிப்பில்லாமல் இல்லாமல் இருப்பதால் கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் விவசாயிகளின் முயற்சியால் சில பகுதி கண்மாய்கள் மட்டும் நூறுநாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் தூர்வாரப்படுகிறது.

ஆனால் கால்வாய்கள், மடைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் பராமரிப்பில்லாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளால் கண்மாய்கள் தூர்வாரியும் பயனற்ற நிலை ஏற்படுகிறது. நீர் வரத்து வழியே உள்ள பாலங்கள், மடைகள் பல ஆண்டுகளாக கேட்பாரற்று இருப்பதால் ஆங்காங்கே நீர் தேங்கி கண்மாய்களுக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. அழிந்து வரும் நீராதாரங்களை அரசு காக்க வேண்டும். வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். இனியாவது விழிக்குமா தமிழக அரசு.

Tags : Sivagangai ,Ramanathapuram district , Sivagangai ,dry , heavy drought,ramanathapuram
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்