×

பாடாய்படுத்தும் சாயக்கழிவு நீர் திணறும் பின்னலாடை நகரம்

* கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

திருப்பூர் : திருப்பூர் நகரை சாயக்கழிவுநீர் பாடாய்படுத்துகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும்,  800-க்கு மேற்பட்ட பிரிண்டிங் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. சாய ஆலைகளுக்கு தினமும் 20 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சாய ஆலை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரில் அதிகளவு டிடிஎஸ் இருப்பதால், இவை துணிகளுக்கு சாயமேற்ற தகுதி வாய்ந்ததாக இல்லை.

டிடிஎஸ் குறைவாக உள்ள தண்ணீரை பயன்படுத்தினால் மட்டுமே துணிகளில் ஏற்றப்படும் சாயம் நிலைத்து நிற்கும். இதனால், மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் இணைப்புகளை விதிமுறைகளை மீறி, பெறுகின்றனர். திருப்பூர் புறநகர் பகுதிகளில் டிடிஎஸ் குறைவாக உள்ள குடிக்க ஏற்றத்தக்க தண்ணீரை டேங்கர் லாரிகளில் வாங்கி, பயன்படுத்துகின்றனர். இதனால் திருப்பூர் மாநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் பொருத்தப்பட்ட குடிநீர் லாரிகள் இயக்கத்தில் உள்ளன.  

சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய 18 பொதுசுத்திகரிப்பு நிலையங்களும், 120-க்கும் மேற்பட்ட தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்படுகிறது. இவை அனைத்தும், நீர் வழி ஓடைகளை ஒட்டி அமைந்துள்ளது. ஒருசில சாய ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை குறைக்கும் விதமாக சாயக்கழிவு நீரை, இரவுநேரங்களில் நீர்வழி ஓடைகளில் திறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 இதனால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதை காணமுடிகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சாய ஆலைகளில் குடிநீர் தேவை எவ்வளவு, துணிகளுக்கு சாயமேற்றிய பின் வெளியேறும் சாயக்கழிவு நீரின் அளவு என்ன? என்பதை கண்டறிய மீட்டர் பொருத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், இவை கண்காணிக்கப்படுவதில்லை. முறையாக சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா?  என்பதை அறிய அதிகாரிகள் யாரும் இல்லை. விதிமீறும் சாய ஆலைகளின் இயக்கத்தை முடக்கி, மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
 இதனால், சாயக்கழிவு நீர், அன்றாடம் ஓடைகளில் வழிந்தோடுகிறது.

நிலத்தடி நீர் மாசுபடுகிறது. சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. ஒருசில அதிகாரிகள், சாய ஆலை உரிமையாளர்களை எச்சரிக்கின்றனர். ஆனாலும், இரவு நேரத்தில் சாயக்கழிவு நீரை  ஓடைகளில் திறந்துவிடுவது தொடர்கிறது. அருகில் உள்ள சாக்கடை கால்வாய்களிலும் திறந்துவிடும் நிலை உள்ளது. இதனால், தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. நொய்யல், ஆற்றின் இரு கரைகளின் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள், கதவு, ஜன்னல் ஆகியவற்றை மூடிக்கொண்டு, வீட்டுக்குள் முடங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 இதுகுறித்து நொய்யல் கரையோர பகுதியில் வசிக்கும் பாரதி குடியிருப்பு நலச்சங்க செயலாளர் தனசேகர் கூறியாவது:  நொய்யல் ஆற்றில் சாயக்ழிவு நீர் கலப்பால் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் கதவு, ஜன்னல் ஆகியவற்றை அடைத்துக்கொண்டு துாங்குவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாயக்கழிவு நீர். செப்டிக் டேங்க் கழிவு நீர் ஆகியற்றை நீர் வழி ஓடைகள்,  நொய்யல் ஆற்றில் விடும் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்கள் மீது  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பது அவர்களது கடமை. ஆனால், தவறு செய்யும் சாய ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க தயங்குவதால் திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியின் சுற்றுச்சூழல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு தனசேகர் கூறினார்.

சாயபட்டறை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன் கூறியதாவது: சங்க உறுப்பினர்களாக உள்ள அனைவரும் தங்களுடைய சாயபட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை, குழாய் மூலம் பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்கிறார்கள். முறையாக சாயக்கழிவு நீரை சுத்தகரிப்பு செய்து, மீண்டும் அந்த தண்ணீரை நாங்களே பயன்படுத்துகிறோம்.

இதனால், எங்களுக்கு தினமும் 8 கோடி லிட்டர் தண்ணீர் மிச்சமாகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குகிறோம். சங்க உறுப்பினர்களாக இல்லாத ஒருசிலர் செய்யும் தவறால், ஒட்டுமொத்த சாயப்பட்டறை உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். தவறு செய்யும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு நாகராஜன் கூறினார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:  திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்படுகிறது. பகல், இரவு வேளைகளில் தனித்தனி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தவறு செய்யும் சாயப்பட்டறைகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்போது அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள் குறித்து தீவிரமாக கண்காணித்து அதன் இயக்கத்தை முடக்கி வருகிறோம்.

அடர்த்தியான குடியிருப்பு பகுதிகள், புறநகர் பகுதிகளில் உயரமான சுற்றுச்சுவர் அமைத்துக்கொண்டு உள்ளே ரகசியமாக சாயப்பட்டறைகள், பிரிண்டிங் யூனிட்டுகள் செயல்படுகின்றன. இவை, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி அந்தந்த பகுதி மக்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள், ஒத்துழைப்பு கொடுத்தால் தவறு செய்யும் தொழிற்சாலைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.  இவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர்.


Tags : city , drainage water, tirupur,Knitting city
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்