×

போடி அருகே டம்மி துப்பாக்கிகள் பறிமுதல் தப்பிய கும்பல் தலைவனுக்கு நக்சலைட்களுடன் தொடர்பு: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

தேனி: போடி அருகே டம்மி துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தப்பிய கும்பலின் தலைவனுக்கு நக்சலைட்களுடன் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து  அவரையும் கும்பலையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்து பங்களாவில் போடி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக நுழைந்து தமமுக முன்னாள் தேனி மாவட்ட செயலாளரான கவுரி  மோகன்தாஸை(50) பிடித்தனர். அங்கிருந்த மேலும் 10 பேர் தப்பி ஓடிவிட்டனர். பங்களாவை சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து 6 டம்மி துப்பாக்கிகள், 10 செல்போன்கள், அரிவாள், கத்தி, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை  கைப்பற்றினர். பிடிபட்ட கவுரிமோகன்தாஸிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: போலீசார் பங்களாவிற்குள் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நெல்லையை சேர்ந்த நீதிராஜன், இக்கும்பலுடன் ஆலோசனை நடத்தி விட்டு சென்றுள்ளார். இவர்  போலீசாரால் தேடப்படும் குற்றவாளி. இவர் மீது பல கொள்ளை, கொலை வழக்குகள் உள்ளன. இக்கும்பலுக்கும் நெல்லையை சேர்ந்த மற்றொரு குற்றவாளியான (தற்போது வேலூர் சிறையில் உள்ளார்) எஸ்டேட் மணிக்கும்  தொடர்புள்ளது. தற்போது சிக்கி உள்ள கவுரி மோகன்தாஸ் மீது கொடைக்கானலில் ₹78 லட்சம் மோசடி வழக்கு, ஊட்டி கோத்தகிரி கோயிலில் சிலை திருடியது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நீதிராஜன், எஸ்டேட் மணி,  கவுரிமோகன்தாஸ் மூவரும் உறவினர்கள். போலீசாரிடம் இருந்து தப்பிய 10 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தமிழகம் முழுவதும் இரிடியம் மோசடி, கள்ளநோட்டு மாற்றுவது போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை தேனி மாவட்டத்தில் இவர்கள் மீது எந்த  வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல வணிக நிறுவனங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இந்த பங்களாவில் தங்கியிருந்தனர். இவர்களது டம்மி துப்பாக்கிகளால் சுடும்போது நிஜ துப்பாக்கி  போல சப்தம் வரும். இதனால் மக்கள் மிரண்டு விடுவார்கள். இதனை மீறி இவர்களை பிடிக்க முற்பட்டால் ரத்தக்காயம் ஏற்படுத்தவும், அதையும் மீறினால் கொலை செய்யவும் இவர்கள் கத்தி, அரிவாள், பட்டாக்கத்தி போன்ற  ஆயுதங்களை வைத்திருந்தனர். இவர்களில் முக்கியமான நபர் கவுரி மோகன்தாஸ். இவர் பிடிபட்டதால் தேனி மாவட்டத்தில் நடக்க இருந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய 10 பேரையும்,  போலீசாரால் பல மாதங்களாக தேடப்பட்டு வரும் நீதிராஜனையும் கைது செய்ய போடி டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நக்சலைட் கும்பலுடன் தொடர்பு: கடந்த 2017, அக்டோபர் மாதம் கேரள மாநிலம், மூணாறு அருகே எல்லப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஜான்பீட்டர், சரவணன் ஆகியோர், தேனி மாவட்டம், போடிமெட்டு பகுதியில்  கொலை செய்யப்பட்டனர். இக்கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நீதிராஜன், 15 நாட்களாக கவுரி மோகன்தாஸிடம் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதையொட்டி நேற்று முன்தினம் நடந்த தேடுதல் வேட்டையில் தான் கவுரிமோகன்தாஸ் ஆயுதங்களுடன் பிடிபட்டார். 10 பேர் தப்பி ஓடினர். நீதிராஜன், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல  பகுதிகளில் உள்ள நக்சலைட்களுடன் தொடர்பு கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கவுரி மோகன்தாஸிடம் சிக்கிய செல்போன்கள் மூலம், இந்த கும்பல் யார், யாருடன் பேசியுள்ளது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். முக்கிய குற்றவாளியான நீதிராஜனை பிடித்தால், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என போலீசார் கூறுகின்றனர்.

Tags : gangster ,Naxalites ,Bodi , Dummy guns ,Badi,Naxalites,escort gang
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...