×

ஐதராபாத்தில் பைனல் கிரிக்கெட் போட்டி ஆம்னி பஸ்களின் கட்டணம் கடும் உயர்வு

சென்னை: ஐதராபாத்தில் பைனல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் தினசரி பஸ்கள் சென்று வருகின்றன.  இவ்வாறு இயக்கப்படும் பஸ்களில் தீபாவளி, புத்தாண்டு, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் வழக்கத்தைவிட பயணிகள் அதிகமாக பயணிப்பார்கள்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ‘ஆம்னி’ பஸ் உரிமையாளர்கள், வழக்கமான கட்டணத்தை உயர்த்தி அதிகமாக வசூல் செய்வார்கள். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதேபோல்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்திற்கும் ஏராளமானோர் சென்று பார்ப்பார்கள்.இதனால் அப்போது வழக்கத்தைவிட கட்டணம் அதிகமாக இருக்கும். அந்தவகையில் டெல்லியை வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. இன்று ஐதராபாத்தில் நடக்கும் பைனல் போட்டியில் மும்பை அணியை  எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் பிரிமியர் தொடரின் பைனலில் 4வது முறையாக மோத உள்ளது.முன்னதாக விளையாடிய 3 பைனலில் மும்பை 2 முறையும், சென்னை ஒருமுறையும் வெற்றி பெற்று கோப்பை  வென்றுள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டிக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை அணியை சேர்ந்த ரசிகர்கள் இங்கிருந்து ஐதராபாத்திற்கு சென்று போட்டியை பார்க்க உள்ளனர்.அவ்வாறு செல்வதற்கு ஆம்னி பஸ்களையே அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதால் வழக்கம் போல்  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்தவாரம் சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு செல்ல ₹700-₹1,200 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு டிக்கட்டின் விலை ₹1,200 முதல் ₹2,000 வரை உயர்ந்துள்ளது. எந்த விலையாக இருந்தாலும்  கொடுத்து செல்வதற்கு ரசிகர்களும் தயாராக உள்ளனர்.

பறக்கும் மீம்ஸ்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி என்றால் அனல் பறக்கும். விளையாட்டையும் தாண்டி ரசிகர்கள் தங்களது உணர்வுகளை அதில் வெளிப்படுத்துவார்கள். அதேபோல் ஐபிஎல் போட்டி என்றால்  சென்னை-மும்பை இடையே நடக்கும் போட்டி தான். இப்போட்டியானது இன்று நடைபெறவுள்ளதால்சமூக வலைதளங்களில் இரு அணி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கலாய்த்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அவை சமூக வலைதளங்களில் பறந்து வருகிறது. போட்டி முடிந்த பிறகும் மீம்ஸ்களை ரசிகர்கள் தெறிக்கவிடுவார்கள்.

Tags : Final cricket, Hyderabad, Omni bus, rising
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...