×

பெட்டி பெட்டியாக பணம் மோடியின் விமானத்திலும் சோதனை நடத்த வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

‘‘தேர்தலில் செலவு செய்வதற்கான பணம் மோடியின் விமானத்தில் எடுத்து செல்லப்படுவதால், அந்த விமானத்தையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்ய வேண்டும்,’’ என மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.மேற்கு வங்கத்தில் 8 மக்களவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. அன்று, 24 பர்கானஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்  பங்கேற்று முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
பாஜ வேட்பாளர் ஒருவரின் காரில் இருந்து ரூ.1,13,985 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இசட் பிளஸ், ஒய்பிளஸ் பாதுகாப்பு பெற்றுள்ள பாஜ தலைவர்கள் தங்கள் பாதுகாவலர்களை பயன்படுத்தி, தேர்தலில் செலவு செய்வதற்கான  பணத்தை போலீஸ் வாகனத்திலேயே கட்டுக்கட்டாக எடுத்து செல்கின்றனர். இதை வாக்காளர்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடிகளை கைப்பற்ற பாஜ திட்டமிட்டுள்ளது.

பிரதமர் பிரசாரத்துக்கு செல்லும் இடத்தில் பத்திரிகையாளர்களோ, தேர்தல் ஆணைய புகைப்படக்காரர்களோ அனுமதிக்கப்படாதது ஏன்?. ஒரே ஒருநாள் மட்டும் மோடி விமானத்தில் எடுத்து சென்ற பெட்டியின் புகைப்படம்  வெளியானது. அத்துடன் சரி. தேர்தல் நேரத்தில் பிரதமரும் சாதாரண மனிதர்தான். அவருடைய விமானத்திலும் தேர்தல் ஆணையம் சோதனை நடத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் பணத்தை கொண்டு உங்களால் தேர்தல் நடத்த முடியாது, நீங்கள் எங்கு பணத்ைத எடுத்து சென்று விநியோகித்தாலும் அதை எங்கள் கட்சியினர் கையும் களவுமாக பிடிப்பார்கள். பிரசாரம் ஓய்ந்து விட்டதால்  இரவில் பாஜ.வினர் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்க தொடங்கி விட்டார்கள். மாநிலத்தில் மோடி கட்சியினர் பணம் நிரப்பப்பட்ட கார்களுடன் சுற்றித் திரிகின்றனர். அவர்களை பணம் கொடுக்க அனுமதிக்க மாட்டோம்.  இவ்வாறு மம்தா பேசினார்.

Tags : Modi ,Boxer Mamta Banerjee , money box , Modi's flight, Mamata Banerjee
× RELATED சொல்லிட்டாங்க…