×

நமோ டிவி விவகாரம் தேர்தல் ஆணையம் பாஜ.வுக்கு நோட்டீஸ்

நடத்தை விதிகளை மீறி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை நமோ டிவியில் ஒளிபரப்பியதாக பாஜவுக்கு டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.மக்களவைத் தேர்தல் பிரசார ஓய்வு நேரத்திலும் நமோ டிவியில் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை பாஜ ஒளிபரப்பியது. இதையடுத்து, இந்த டிவியை நடத்தி வரும் பாஜவுக்கு டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங்  நோட்டீஸ் அனுப்பினார். இது குறித்து அவர் கூறுகையில், ``தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிந்தது. இதனைத் தொடர்ந்து பிரசார ஓய்வு நேரம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் நகரங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடத்தப்பட்டு வந்த பிரசாரம் ஓய்வடைந்துள்ளது. ஆனால், நடத்தை விதியை மீறி நமோ டிவி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. அதனால் அதனை நடத்தி  வரும் பாஜவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.நமோ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முன் டெல்லி தேர்தல்  அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும் என்று பாஜவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் நமோ டிவியை பாஜ நடத்தி வருவதால் அதில் ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் டெல்லி ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு கமிட்டியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி பெறாத அரசியல் விளம்பர நிகழ்ச்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : EC ,election commission , Namo TV , EC issues ,notice,BJP
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல்...