×

பாஜ, ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி ஆகியோர் நேரு குடும்பத்தை வெறுக்கின்றனர்: ராகுல் காந்தி பிரசாரம்

‘‘பாஜ,  ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எங்கள் குடும்பத்தை  வெறுக்கின்றனர். ஆனால், அவர்களை அன்பால் பணிய வைப்பேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தில் மக்களவை  தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேவாஸ் தொகுதியில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், நாட்டுப்புற பாடகர் பிரகலாத்  திபானியாவை ஆதரித்து நேற்று ராகுல்   பிரசாரம் செய்தார். அப்போது  அவர் பேசியதாவது: பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி  ஆகியோர் எங்கள் குடும்பத்தின் மீது வெறுப்புணர்வை காட்டுகின்றனர்.  எனது  தந்தை, பாட்டி மற்றும் தாத்தா மீது கோபம் மற்றும் வெறுப்புணர்வை  வெளிப்படுத்துகின்றனர்.  ஆனால், நான் பிரதமர் மோடியை அன்பாக தழுவி அணைத்து  எனது அன்பை வெளிப்படுத்தினேன். பிரதமர் தனது மனதில் உள்ள வெறுப்புணர்வை   அகற்றி அன்போடு ஆட்சி புரியவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு  செய்தேன்.   அன்பால் தான் வெறுப்பை வெல்ல முடியும்.

இருப்பினும் மோடி எனது  தந்தையை விமர்சித்து ஊழலில் ஈடுபட்டதாக பேசினார்.  இதைத்தொடர்ந்து ராஜிவ் காந்தி ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை சொந்த டாக்சி போல்  சுற்றுலா எடுத்துச் சென்றதாகவும் அவதூறு பரப்பி  வருகிறார். காங்கிரஸ்  தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள, ஏழைகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச  வருவாயாக ரூ.6 ஆயிரம் வழங்கும் நியாய் திட்டத்தால் மக்களின்  வாங்கும் சக்தி அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.  இந்த அருமையான  திட்டம் பிரதமர் மோடியால்தான் எங்களுக்கு கிடைத்தது. எப்படி என்றால்  மக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என கடந்த தேர்தலில்  மோடி தெரிவித்தார். ஆனால் அந்த திட்டம்  இதுவரை அமல்படுத்தப்படவில்லை.  ஆகையால் தான் காங்கிரஸ் சார்பில் நியாய் திட்டம் உருவானது. இத்திட்டத்தின்  மூலம் ஏழை, எளிய மக்களுக்கு 5 ஆண்டில் ரூ.3.60 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டது. மேலும் ஜிஎஸ்டி என்றால்  சரக்கு மற்றும் சேவை வரி அல்ல, கப்பர் சிங் வரி(ஜி.எஸ்.டி) இந்த  வரியால்  மக்கள் தங்களது வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.  காங்கிரஸ் கட்சி மத்தியில்  ஆட்சிக்கு வந்தால் 22 லட்சம் பேருக்கு  அரசு வேலை வாய்ப்பு  ஏற்படுத்தப்படும். மேலும் கிராம பஞ்சாயத்துகளில் கூடுதலாக 10 லட்சம்  பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.



Tags : BJP ,RSS ,Nehru ,Modi ,campaign ,Rahul Gandhi , Bhaj, RSS ,Modi, Rahul Gandhi, campaign
× RELATED காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்