×

பிரபல ஓட்டல் உரிமையாளரை மிரட்டி 2 லட்சம் பறிக்க முயன்ற அதிமுக பிரமுகர் கைது: அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பலரிடம் கல்லா கட்டியது அம்பலம்

பெரம்பூர்:வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (50). இவர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், வடபழனி ஆகிய பகுதிகளில் ஓட்டல் நடத்தி வருகிறார். தற்போது, தண்டையார்பேட்டையில் புதிதாக ஓட்டல் கட்டும் பணியில்  ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தண்டையார்பேட்டை டி.எச்.சாலையை  சேர்ந்த, ராயபுரம் பகுதி 49வது வட்ட அதிமுக முன்னாள் பொருளாளர் அறிவழகன் (45), ஓட்டல் உரிமையாளர் ஆறுமுகசாமியை சந்தித்து,  ‘‘இப்பகுதியில் புதிதாக ஓட்டல் கட்ட வேண்டும் என்றால், எனக்கு ₹2 லட்சம் தர வேண்டும்,’’ என தெரிவித்துள்ளார். ஆனால், ஆறுமுகசாமி பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அறிவழகன், ‘‘நான் யார் தெரியுமா, ஆளும்கட்சி பிரமுகரை பகைத்து கொண்டு உன்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு  வேண்டிய அமைச்சர் மூலம், உனது ஓட்டல் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்துகிறேன் பார்,’’ என மிரட்டல் விடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து, மாநகராட்சி, சுகாதாரத்துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவில், ஆறுமுகசாமி விதிகளை மீறி ஓட்டல் கட்டுவதாக, புகார் மனு அனுப்பியுள்ளார். அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து,  ஓட்டல் கட்டுமான பணியை ஆய்வு செய்தபோது, பொய்யான புகார் என தெரியவந்தது. இதனிடையே, பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசில் ஆறுமுகசாமி புகார் கொடுத்தார். அதில், ‘‘நான்  புதிதாக ஓட்டல் கட்டி வருகிறேன். இதன் கட்டுமான பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெற வேண்டும் என்றால் எனக்கு ₹2 லட்சம் தர வேண்டும், என்று அதிமுக பிரமுகர் அறிவழகன் மிரட்டுகிறார். அவர் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அறிவழகனை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘‘இவர், தமிழக அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் எனவும், ராயபுரம், தண்டையார்பேட்டை  உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக வீடு, அடுக்குமாடி கட்டிடம், ஓட்டல், கடை கட்டுபவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இவர், இதுபோன்று வேறு எத்தனை பேரிடம் பணம் பறித்துள்ளார், இதற்கு உடந்தையானவர்கள் யார் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : AIADMK ,hotel owner , AIADMK ,2 lakh,owner arrested
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...