×

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயண விமான செலவு ரூ.393 கோடி: ஆர்டிஐ மனு மூலம் கிடைத்த தகவல்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்காக ரூ.393 கோடி செலவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதாக பரவலாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. தற்போது அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மும்பையை சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர் அனில் கல்கலி, பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.ஐ.) கீழ் பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கு எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்ற தகவலை கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சரவை விவகாரத்துறையில் அக்கவுண்ட் பிரிவு மூத்த அதிகாரியாக பணியாற்றும் சதீஷ் கோயல் பதில் அளித்துள்ளார். அதில், 2014-15 முதல் 2018-19ம் ஆண்டு வரை பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.393.58 கோடி செலவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேபினட் அமைச்சர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக சேர்ந்து ரூ.311 கோடியை செலவானது. இணையமைச்சர்களின் சுற்றுப்பயணத்திற்கு ரூ.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2014-15ம் ஆண்டில்தான் வெளிநாட்டு பயணத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியும், அவரது கேபினட் அமைச்சர்களும் சேர்ந்து அதிகபட்சமாக ரூ.88 கோடி செலவிட்டுள்ளனர்.

பிரதமரும், கேபினட் அமைச்சர்களும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு மட்டும் ரூ.263 கோடி செலவிட்டுள்ளனர். உள்நாட்டு பயணத்திற்கு ரூ.48 கோடி செலவு செய்துள்ளனர். இணையமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.29 கோடியும், உள்நாட்டு பயணத்திற்கு ரூ.53 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமரின் உள்நாட்டு சுற்றுப்பயண செலவு குறித்த விவரங்களை அனில் கல்கலி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் பிரதமரின் உள்நாட்டு சுற்றுப்பயணம் தொடர்பான செலவுகள் குறித்த கணக்கு இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. பிரதமரின் உள்நாட்டு பயணம், பல்வேறு அரசு நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் எனவே அச்செலவு குறித்த விவரங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அரசுபூர்வமானது இல்லை என்பதால் அதற்கு பிரதமர் அலுவலகம் செலவு செய்வதில்லை என்றும் எனவே அது குறித்த தகவல் தங்களிடம் இல்லை என்றும் பிரதமர் அலுவலக அதிகாரி பிரவீன் குமார் கொடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 49 வெளிநாட்டு பயணம்
பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 49 முறை வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக பிரதம அலுவலக இணையதளம் தெரிவிக்கிறது. மேலும் பிரதமரின் உள்நாட்டு பயணத்திற்கான செலவு பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் இருந்து செலவிடப்படுவதாகவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வெளிப்படைத்தன்மை இல்லை’
தகவல் உரிமை ஆர்வலர் அனில் கல்கலி கூறுகையில், ‘‘பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களின் சுற்றுப்பயண செலவு விவரங்களை தனித்தனியாக கணக்கு காட்டவில்லை. பயண செலவு குறித்த முழுமையான விவரம் தெரிவிக்கப்படவில்லை. பயணச் செலவு விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒவ்வொரு அமைச்சரின் பயண செலவுகளையும் தனித்தனியாக கணக்கு வைத்து அதனை பொது இணையத்தளத்தில் வெளியிடவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Narendra Modi ,colleagues ,Cabinet , Prime Minister Modi, Union Ministers Tour expenses cost Rs 393 crore: information received from the RTI petition
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!