×

ஐதராபாத்தில் இன்று பரபரப்பான பைனல் 4வது முறையாக பட்டம் வெல்ல சென்னை - மும்பை பலப்பரீட்சை: இரவு 7.30க்கு தொடங்குகிறது

ஐதராபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30க்கு தொடங்குகிறது. இந்தியன் சூப்பர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 12வது சீசன், கடந்த மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடிய நிலையில்... முதல் நான்கு இடங்களைப் பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18), சென்னை சூப்பர் கிங்ஸ் (18), டெல்லி கேப்பிடல்ஸ் (18), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (12) அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. அடுத்த இடங்களைப் பிடித்த கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெளியேற்றப்பட்டன. பிளே ஆப் சுற்றில், முதலில் நடந்த குவாலிபயர்-1 ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. அடுத்து டெல்லி - ஐதராபாத் அணிகளிடையே நடந்த எலிமினேட்டர் போட்டியில், டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஐதராபாத் அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து, குவாலிபயர்-2 ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி 8வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. டெல்லி அணியின் பைனல் கனவு மீண்டும் கலைந்தது. இந்த நிலையில், ஐபிஎல் 12வது சீசனில் கோப்பையை முத்தமிடும் அணி எது என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டி, ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், 4வது முறையாக சாம்பியனாகி சாதனை படைக்கும் முனைப்புடன் வரிந்துகட்டுகின்றன. சென்னை அணி 2010, 2011, 2018லும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017லும் கோப்பையை கைப்பற்றி உள்ளன. நடப்பு சீசனில் மும்பை அணியுடன் மோதிய 2 லீக் ஆட்டம் மற்றும் குவாலிபயர்-1 ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், கேப்டன் டோனி உட்பட அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளதால் சிஎஸ்கே மிகுந்த உற்சாகத்துடன் பைனலை எதிர்கொள்கிறது. டோனி தலைமையிலான சென்னை அணி 3 தோல்விகளுக்கும் ஒட்டுமொத்தமாக பழிதீர்க்கும் வகையில் இன்று மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொள்ளுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடக்க வீரர்கள் டுபிளெஸ்ஸி, வாட்சன் பார்முக்கு திரும்பியிருப்பதும் சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவர்களுடன் டோனி, ரெய்னா, ராயுடு, விஜய், ஜடேஜா, பிராவோ என வலுவான பேட்டிங் வரிசை எந்த சவாலுக்கும் தயாராகவே உள்ளது. ஹர்பஜன், ஜடேஜா, தாஹிர் சுழலும், சாஹர் வேகமும் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். நடப்பு சீசனில் சிஎஸ்கே சுழல் கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் 4வது முறையாக கோப்பையை வெல்லும் உறுதியுடன் களமிறங்குகிறது. அந்த அணியிலும் ரோகித், டி காக், சூரியகுமார், இஷான், ஹர்திக், குருணல், போலார்டு என்று அதிரடி வீரர்கள் அடித்து நொறுக்க காத்திருக்கின்றனர். மலிங்கா, பூம்ரா, ராகுல் சாஹர், குருணல், ஹர்திக் பந்துவீச்சு சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.டோனி (கேப்டன்), டு பிளெஸ்ஸி, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரி, சைதன்ய பிஷ்னோய், ரிதுராஜ் கெயிக்வாட், டுவைன் பிராவோ, கர்ண் ஷர்மா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், சான்ட்னர், ஷர்துல் தாகூர், மோகித் ஷர்மா, கே.எம்.ஆசிப், தீபக் சாஹர், என்.ஜெகதீசன், ஸ்காட் குகெலெஜின்.


மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா (கேப்டன்), குவின்டான் டி காக், சூரியகுமார் யாதவ், யுவராஜ் சிங், கெய்ரன் போலார்டு, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, மிட்செல் மெக்லநாகன், மயாங்க் மார்கண்டே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பூம்ரா, அன்மோல்பிரீத் சிங், சித்தேஷ் லாட், அனுகுல் ராய், எவின் லூயிஸ், பங்கஜ் ஜெய்ஸ்வால், பென் கட்டிங், இஷான் கிஷன், ஆதித்யா தாரே, ரசிக் சலாம், பரிந்தர் ஸ்ரண், ஜெயந்த் யாதவ், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், லசித் மலிங்கா.



Tags : Chennai ,Hyderabad ,Mumbai , Today ipl final in Hyderabad
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...