×

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் என்னவானது? தோல் தொழிற்சாலை கழிவுகள் பொது இடங்களில் எரிப்பு: வேதனையில் தவிக்கும் ராணிப்பேட்டை மக்கள்

ராணிப்பேட்டை:  பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்க ராணிப்பேட்டையில் பொதுவெளிகள் மட்டுமின்றி பழைய விவசாய கிணற்றில் கொட்டி எரிப்பதால் ராணிப்பேட்டை, மாந்தாங்கல் பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் வசிக்க தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் ராணிப்பேட்டையும்  இடம் பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்நகரம் பட்டியலில் முதல் வரிசையில் வருகிறது. இந்நகரிலும், நகரைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. ராணிப்பேட்டை மட்டுமின்றி, வாலாஜா, மேல்விஷாரம், கத்தியவாடி, மாந்தாங்கல், வி.சி.மோட்டூர், வானாப்பாடி என சுற்றுப்புற கிராமங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இத்தொழிற்சாலைகள் வெளியேற்றும் குரோமிய நச்சுக்கழிவால் பல இடங்களி்ல்  நிலத்தடி நீர் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது.  இதனால், தோல் நோய்கள், புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அரசின் மானிய உதவியுடன் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, சிப்காட், மேல்விஷாரம் பகுதிகளில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனாலும், பொதுவெளிகள், ஆற்றுப்படுகைகளில் தோல் கழிவுநீரை கலப்பதுடன், தோல் தொழிற்சாலை திடக்கழிவுகளை பொதுவெளி, கைவிடப்பட்ட பொதுக்கிணறுகள், பயன்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில் போட்டு எரிப்பதும் தொடர்கிறது. குறிப்பாக ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் ஊராட்சி ஜெ.ஜெ. நகரில் குடியிருப்புகளின் மிக அருகில் பாழடைந்த விவசாய கிணறு தோல் தொழிற்சாலை திடக்கழிவுகளை கொட்டி எரிக்கும் மையமாக மாறியுள்ளது. அதோடு, ராணிப்பேட்டைக்கும் வி.சி. மோட்டூருக்கும் இடையில் உள்ள காலியிடத்திலும் தோல் தொழிற்சாலை கழிவுகள் நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளுடன் சேர்த்து எரிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி  மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு, மூச்சுத்திணறலுடன், தொற்றுநோய் அபாயமும் சூழ்ந்துள்ளது. தோல் கழிவு சுத்திகரிப்பை பொறுத்தவரை இதனை கண்காணிக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏனோ இவ்விஷயத்தை கண்டு கொள்வதில்லை. எனவே, இனியாவது இதை தடுக்க சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : refineries ,places ,queens , What are the public refineries? Leather factory waste Flames in public places: People in painful queens
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...