கோவையிலிருந்து ஊட்டிக்கு பேருந்துகள் பற்றாக்குறை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி

கோவை: கோவையிலிருந்து ஊட்டிக்கு செல்ல பேருந்துகள் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கோவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நேரடியாக செல்ல 15 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே சமயம் நீலகிரி போக்குவரத்து பணிமனையில் இருந்து கோவை முதல் நீலகிரிக்கும், நீலகிரி முதல் கோவைக்கும் நேரடியாக 45 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. கோவை புதிய பேருந்து நிலையத்தில் ஊட்டிக்கு செல்ல வழக்கமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகளை தவிர்த்து கோவையில் பணி புரிந்து வரும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இந்த நாட்களில் இங்கிருந்து செல்வது வழக்கம்.

தற்போது கோடை விடுமுறையைெயாட்டி தொடர்ந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவையில் இருந்து பேருந்துகளில் ஊட்டிக்கு செல்கிறார்கள். இதனால் கோவை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் ஊட்டிக்கு செல்ல பேருந்துகள் பற்றாக்குறை உள்ளதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். பேருந்து பற்றாக்குறையால் கோவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இன்று காலையும் கோவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல பேருந்துகள் இல்லாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் நின்றனர். அவர்கள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்து நின்றதை பார்க்க முடிந்தது. இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘‘பல மணி நேரமாக பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படியே பேருந்து வந்தாலும் பயணிகள் கூட்டம் காரணமாக இருக்கைகள் நிரம்பி விடுகிறது. இதனால் மீண்டும் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது,’’ என்றனர். கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதலாக தினமும் 5 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில் 10 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.

× RELATED கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியால்...