×

சேத்தியாத்தோப்பில் அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: மவுனம் காக்கும் மாவட்ட நிர்வாகம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அரசுக்கு சொந்தமான குமார உடைப்பு வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் அடுக்குமாடி சொகுசு கட்டிடம், சமயலறை, கழிவறை உள்ளிட்ட பல கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கறில், நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்றிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி தமிழக அரசு கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் குமார உடைப்பு பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடிப்பதற்கு அதிகாரிகளின் மூலம் நடவடிக்கை எடுத்தது. அப்போது கட்டிடத்தை இடிப்பதற்கு வந்த சிதம்பரம் முன்னாள் ஆர்டிஓவை, தடுத்து நிறுத்தி பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். இருந்தாலும் அப்போது அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குமார உடைப்பு வாய்க்கால் பகுதியை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை போடுவதற்கு வாய்க்கால் கரையை சமன்படுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மவுனம் காப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் போனால் பலநூறு ஏக்கருக்கு பாசனத்திற்கு பயன்படும் குமார உடைப்பு வாய்க்கால் பிறகு இல்லாமல் போய்விடும் என்று வேதனையோடு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : administration , Settiyattoppu, occupation, district administration
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...