×

குஜிலியம்பாறை அருகே 500 ஆண்டு தேர் அழகு பெறுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே ராமகிரி கோயிலின் 500 ஆண்டு பழமையான தேரை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான அருள்மிகு ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலின் கட்டிடகள் முற்றிலும் சேதமடைந்ததால் தற்போது பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டிட பணிகள் நடந்து வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். ஆனால் கோயில் கட்டிடப்பணி காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழா நடக்கவில்லை. கோயிலுக்கு சொந்தமாக 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று உள்ளது. திருவிழா நாட்களில் இத்தேர் கோயிலை சுற்றி வலம் வரும். மிகவும் பிரசித்தி பெற்ற இத்தேர் தற்போது பழுதடைந்து கேட்பாரற்று கிடக்கிறது.

இத்தேரை கோயிலின் வெளிப்புற பகுதியில் தென்னங்கீத்து கூரையில் நிறுத்தியுள்ளனர். மழை பெய்யும் நாட்களில் கூரையின் உள்ளே நிற்கும் தேர் மீது மழைநீர் முழுவதும் ஒழுகி வீணாகி வருகிறது.இத்தேரை புதுப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சேதமடைந்த கோயில் கட்டிடங்களை சீரமைக்க கோரியும் அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பணிகள் எங்களின் பங்களிப்போடு நடந்து வருகிறது. தற்போது தேரையாவது புதுப்பித்து தர வேண்டும் என கோரினோம். அதற்கும் செவி சாய்க்காமல் உள்ளனர். தேரை புதுப்பிக்க ரூ.20 லட்சம் வரை செலவாகும் என தெரிகிறது. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் தேரை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : charm ,Gujuliyambaram , gujiliyamparai,Temple Chariot ,500 years old , ramagiri Temple
× RELATED எஸ்.ஏ. கல்லூரியில் சாசம் மெலன்ஸ் திறமை திருவிழா