×

ஓசூர் அருகே குட்டிகளுடன் கிராமத்தில் புகுந்த யானைகள்:துரத்தியதில் கீழே விழுந்து விவசாயி படுகாயம்

ஓசூர்: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய கிராமத்தில் 4  குட்டிகளுடன் 12 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட  முடியாமல், வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் 4 குட்டிகளுடன் 12 காட்டு யானைகள்  தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதி விட்டு  வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து, பயிர்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய 12   யானைகள் ஓசூர் அடுத்த ஆலூர், தின்னூர் கிராமங்களுக்கு புகுந்தன.  இதுகுறித்த தகவலறிந்த 20 வன ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது அங்கிருந்து சென்ற  யானைகள், கதிரேப்பள்ளி, கிராமத்தில் நுழைந்து விளை நிலங்களில் தஞ்சம் அடைந்தன.  வெங்கடேசபுரத்தில் விவசாயி சீத்தப்பா (45) என்பவர்,  நேற்று காலை விவசாய  நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக  வந்த யானை, சீத்தப்பாவை விரட்டியது. யானைகளிடம் இருந்து தப்பிக்க ஓடிய  சீத்தப்பா, கீழே  விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்  மீட்டு,  ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த  வனத்துறையினர் 3 மணி நேரம் போராடி 12 காட்டு  யானைகளை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டினர்.


Tags : village ,kittens ,Hosur , Hosur, elephants , farmer injured
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி