×

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து பிட்ரோடா கூறிய கருத்துக்கு எதிர்ப்பு

ரோடக்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் ெதரிவித்துள்ளார். பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாக இருந்த சீக்கியர்களால் கொலை செய்யப்பட்டதை அடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தது. 1984ம் ஆண்டில் நடந்த இந்த கலவரத்தில் 3,000க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்திய தலைவரும், காங்கிரஸ் தலைவர் ராகுலின் குருவுமான சாம் பிட்ரோடா அது 1984ம் நடந்த முடிந்து விட்டது. அது முடிந்துபோன கதை; அதற்கு இப்போது என்ன செய்ய முடியும்?’ என கேட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அரியானா மாநிலத்தில் உள்ள ரோடாக்கில் இறுதி கட்ட பிரசாரத்தில் நேற்று பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர் சார்ந்த கட்சியின் குணம், மனநிலை மற்றும் உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது. நேற்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் 1984 ல் நடந்த சம்பவம் குறித்து உரத்த குரலில் பேசினார். அவர் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர். அவர் ராஜீவின் நெருங்கிய நண்பர், காங்கிரஸ் தலைவர் ராகுலின் குரு. இவ்வாறு அவர் பேசினார்.  இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ 1984ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக காங்கிரஸ் வருந்தவில்லை. இது ஒரு சமூகத்தை அவமதிக்கும் செயல். மிகப்பெரிய தேசபக்தி கொண்ட ஒரு சமூகத்தின் இனப்படுகொலையை அர்த்தமற்றதாக்கிய பிட்ரோடாவை கட்சியில் இருந்து ராகுல் ெவளியேற்றுவாரா?’ என்று கேட்டுள்ளார்.

பிட்ரோடோ பதிலடி
தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது நேர்காணலில் தெரிவித்த 3 வார்த்தைகளை திசை திருப்ப பாஜ முயல்கிறது. இதன் மூலம் உண்மையை சிதைக்கிறது, மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது. அவர்களின் தோல்வியை மறைக்க முயல்கிறது. கடந்த 1984ம் ஆண்டில்  எனது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு நடந்த  கொடூர செயலுக்காக நான் மிக வருத்தமடைகிறேன். அவர்களின் வலியை என்னால் உணர முடிகிறது. நடந்து முடிந்த இந்த செயலுக்கும் தற்போதைய தேர்தலுக்கும் என்ன தொடர்பு? கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக என்ன செய்தார் என்பதே இப்போதைய கேள்வி? ராஜீவ் காந்தியும் சரி, ராகுலும் சரி, மதத்தின் பெயரால் குறிப்பிட்ட மக்களை ஒருபோதும் குறி வைத்ததில்லை. சமூக ஊடகங்கள் மூலம் உண்மை சிதைக்கப்படுகிறது. பொய்கள் பெருக்கப்படுகிறது.’ என கூறியுள்ளார்.

Tags : Pitroda ,riots ,Sikhs , Sikhs, Pitroda
× RELATED மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு...