×

திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில் வந்த விவகாரம் ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

* இந்தியில் தெரிவித்த தகவல் புரியாததால் வந்த வினை
* மதுரையில் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் 2 பயணிகள்  ரயில்கள் நேருக்கு நேராக வந்த சம்பவத்தில் 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மதுரையில் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஸ்ேடஷன் மாஸ்டர் ஒருவர் இந்தியில் கூறிய தகவல் புரியாததால் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மதுரையில் இருந்து நேற்று முன்தினம் மாலை செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் கிளம்பி சென்றது. இந்த ரயில் திருமங்கலத்துக்கு மாலை 5.45 மணிக்கு வந்தது. கிராஸிங் மற்றும் சிக்னல் பிரச்னையால் ரயில் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது. பயணிகள் ஸ்டேஷனில் இறங்கி பிரச்னையில் ஈடுபட்டதால் ரயில் கிளம்பியது. அதே நேரத்தில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டை ரயில் மதுரைக்கு
கிளம்பியது.

 இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக பயணம் செய்வதை உறுதி செய்த கேட்கீப்பர், துரிதமாக கொடுத்த தகவலை தொடர்ந்து, திருமங்கலத்திலிருந்து கிளம்பிய ரயில் ரிவர்ஸில் மீண்டும் திருமங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மதுரை ரயில் வந்து சேர்ந்தப் பிறகு, 2 மணிநேரம் தாமதமாக செங்கோட்டை ரயில் கிளம்பி சென்றது. இந்த சம்பவத்தில் கேட்கீப்பர் சமயோசிதமாக செயல்பட்டதால் பெரிய அளவிலான ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி  மேத்தா, தலைமை பயணிகள் இயக்க அதிகாரி சிவகுமார் மற்றும் தலைமை சிக்னல்  மேற்பார்வை அதிகாரி ராஜசேகரன் ஆகியோர், நேற்று மதுரை வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு சென்றும் அதிகாரிகள் விசாரித்தனர்.

இதன்பின், சம்பவ நேரத்தில் பணியில் இருந்த  திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர்  திவ்சிங்மீனா மற்றும் நிலைய கட்டுப்பாடு அதிகாரி முருகானந்தம் ஆகியோரை கோட்ட   ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் சஸ்ெபண்ட் செய்து உத்தரவிட்டார்.விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கள்ளிக்குடி ரயில் நிலைய அதிகாரி  திவ்சிங் மீனா இந்தியில் கூறிய தகவலை, திருமங்கலம் நிலைய அதிகாரி  ஜெயக்குமார் தவறாக புரிந்துகொண்டதால், பெரும் விபத்து ஏற்படும் இச்சூழ்நிலை  உருவானது தெரியவந்தது’’ என்றார்.

Tags : persons ,train station ,station master ,Tirumangalam , Tirumangalam, Railway, 2 train and 3 people suspended
× RELATED பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம்...