×

ரபேல் வழக்கு மறுபரிசீலனை மனு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ரபேல் வழக்கில் முறைகேடு இல்லை என கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.  பிரான்சிடம் இருந்து ரபேல் போர்  விமானங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ்  உட்பட பல தரப்பினர் குற்றம் சாட்டினர். இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  ‘ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை’ என கடந்த டிசம்பர் 14ம் தேதி  தீர்ப்பு அளித்தது.  இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்த சில ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாயின. இதை அடிப்படையாக வைத்து ரபேல் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இந்த முறைகேடு தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது. மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட சட்ட விரோத, அரைகுறை ஆவணங்கள் என்பதால், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கூடாது என மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியிருந்தார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை மறைத்து, பொய் தகவல்களை அளித்து பெறப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த வழக்கில் முழுமையான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் பல தகவல்களை மறைத்து உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழி நடத்தியுள்ளது’ என கூறியிருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடினார். அப்போது, ‘‘இந்த வழக்கில் பல தகவல்களை மத்திய அரசு மறைத்துள்ளதால், இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்து, குற்ற விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,’’ என கூறினார். 2 மணி நேரம் நடந்த விசாரணைக்குப்பின் இதன் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.  ராகுல் மனு மீதான தீர்ப்பும் ஒத்திவைப்பு: ரபேல் விவகாரம் பற்றி  பொதுக்கூட்டங்களில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘காவலாளியே திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது’ என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது டெல்லியை சேர்ந்த பாஜ எம்பி.யான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ராகுல், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். மீனாட்சி லெகி இதை ஏற்க மறுத்ததை தொடர்ந்து, ராகுல் தரப்பில் கடந்த 8ம் தேதி புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டு விட்டதால், தன் மீதான நீதிமன்ற கிரிமினல் அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாணைக்கு வந்தது. அப்போது, ராகுல் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி ஆஜராகி வாதிடுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல் ஏற்கனவே இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தவறான கருத்து தெரிவித்ததற்காக நீதிமன்றத்தில் வருத்தமும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீதான நீதிமன்ற கிரிமினில் அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும்,’’ என வலியுறுத்தினார்.

இந்த வழக்கில் லெகி சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘‘ராகுல் மன்னிப்பு கேட்டதை ரத்து செய்து விட்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவருடயை கருத்துக்காக பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court , Raphael case, the Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...