×

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை : உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, கள்ளக்குறிச்சி அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி(அறந்தாங்கி), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.  இதன் அடிப்படையில் மேற்கண்ட 3 பேருக்கும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதற்கு எதிராக ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகரின் அனைத்து நடவடிக்கைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சபாநாயகரின் நோட்டீஸ் நடவடிக்கைக்கு எதிராக மேற்கண்ட 2 எம்.எல்.ஏக்களை போன்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும் கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,”எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் சட்டசபை சபாநாயகருக்கு எதிராக எதிர்கட்சி தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட மனு  நிலுவையில் உள்ளது. அதனால் தனக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் பிறப்பித்த உத்தரவில்,”எம்.எல்.ஏ பிரபு மீதான சபாநாயகர் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. மேலும் இதுகுறித்து ஜூலை 12ம் தேதிக்குள் தமிழக சபாநாயகர் தனபால் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என நேற்று உத்தரவிட்டனர்.

Tags : Speaker ,MLA , Speaker's letter to the MLA, TTV Dinakaran
× RELATED உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்...