×

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்னும் தபால் ஓட்டு வரவில்லை : தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு இன்னும் கிடைக்கவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களில் பலருக்கும் இன்னும் தபால் ஓட்டு வழங்கப்படாமல் உள்ளது. சிலருக்கு தபால் ஓட்டு வீட்டு முகவரிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் முகவரி தவறு என திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தபால் ஓட்டு கிடைக்காதவர்கள் தொகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியரிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை.

கடந்த தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்திலேயே பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் வரை தங்கள் ஓட்டுக்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செலுத்தி வந்தனர். அந்த நடைமுறையை தற்போதும் பின்பற்ற வேண்டும். மேலும், இதுவரை தபால் ஓட்டுகள் வழங்காதவர்களுக்கு தபால் ஓட்டு வழங்க வேண்டும். தபால் ஓட்டு அனுப்பப்பட்டு முகவரி சரியில்லை என்று திரும்பி பெறப்பட்டவர்களுக்கு மீண்டும் அதை முறையாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தபால் ஓட்டுக்களை செலுத்துவதற்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தொகுதி வாரியாக வாக்கு பெட்டிகளை வைக்க வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : teachers ,Government employees ,Chief Electoral Officer , Government employees ,teachers ,engaged in elections , post
× RELATED வாக்கு சதவீதம் குறித்து காலை 11...