×

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் ( திமுக தலைவர்): நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பல படைப்புகளை வழங்கிய, ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். இந்த மண்ணில், தமிழ்ப் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த முஸ்லிம் மக்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் பதிவு செய்து, மதநல்லிணக்கப் படைப்பாளியாகத் திகழ்ந்த தோப்பில் முகமது மீரான் மறைவுக்குத் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கியவாதிகள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ் ( பாமக நிறுவனர்): சாகித்ய அகாடமி விருது பெற்ற சாய்வு நாற்காலி நாவல் முகமது மீரானின் இலக்கியத் திறமைக்கு சான்றாகும். எழுத்தாளர் முகமது மீரானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்):  முற்போக்கு இலக்கிய முகாமுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் எழுத்துக்களை சோசலிச எதார்த்தவாத படைப்புக்கள் என வகைப்படுத்த முடியும். தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது. திருமாவளவன் ( விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்): முஸ்லிம் சமூகத்தின் உள்கட்டுமானம் குறித்த பார்வையை வெகுமக்களுக்குத் தந்ததில் தோப்பில் முகமது மீரான் எழுத்துக்கு பெரும் பங்குள்ளது. மூடத்தனங்களை தோலுரித்தும், பிற்போக்கு வாதங்களை எதிர்த்தும் தொடர்ச்சியாக படைப்புகளைத் தந்தவர். அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
ஜவாஹிருல்லா ( மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ): சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் மரணித்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. சாகித்ய அகாதமி விருது மட்டுமின்றி  தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்  விருது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருது,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருதுகள்  முதலியவற்றைப் பெற்றுள்ளார். சமகால தமிழக வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்ட ஒரு இலக்கிய ஜாம்பவானாக விளங்கியவர். அவரது இறப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு மிகப் பெரும்  இழப்பாகும்.


Tags : party ,leaders ,death ,Mohammed Meeran , Political party leaders, Mohammed Meeran's death , writer's dot
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...