×

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி 2மணி நேரம் வித்தியாசம் கரூர் மாவட்ட எஸ்பி அதிரடி மாற்றம்

சென்னை: வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா 2 மணி நேரம் காலதாமதமாக காட்டிய விவகாரத்தை தொடர்ந்து, கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த டி.கே.ராஜசேகரனை அதிரடியாக மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார். தேர்தல் நேரத்தில் போலீசார் அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தொடர் புகார்கள் வந்தது. இதற்கிடையே, கடந்த வாரம் கரூர் மாவட்டம் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா சம்பவம் நடந்த நேரத்தை காட்டிலும் 2 மணி நேரம் காலதாமதமாக காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதுகுறித்து உரிய ஆதராங்களுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வாக்கு பதிவு இயந்திரம் ைவத்துள்ள மையத்தின் முன்பு போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது, ஜோதிமணி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தற்போது பாதுகாப்பில் உள்ள அனைவரையும் மாற்ற வேண்டும் என்று குற்றம்சாட்டினார். மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தனர். அதைதொடர்ந்து கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த டி.கே.ராஜசேகரனை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில் கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக காவல் துறை கணினிமயமாக்கல் பிரிவில் இருந்த விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நேற்று தமிழக கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். இந்த அதிரடி பணியிடமாற்றத்தை தொடர்ந்து கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக விக்ரமன் இன்று பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

Tags : CCTV ,SP ,vote count center ,Karur , CCTV 2-hour , vote count center, Karur district SP has changed
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்