×

அசைவ உணவு சாப்பிட்ட சகோதரர்கள் பலி: விஷம் வைத்து கொலையா? போலீஸ் விசாரணை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அசைவ உணவு சாப்பிட்ட சகோதரர்கள் பலியாகினர். உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார்களா அல்லது மது குடித்ததால் இறந்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா (28). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஊரில் திருவிழா என்பதால் பாண்டியனின் அண்ணன்கள் ரமேஷ் (39), முனீஸ் (36), ஜோதி லட்சுமணன் (34) ஆகியோர் மேக்கிழார்பட்டி வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் மது குடித்து விட்டு, வீட்டில் அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மே 8ம் தேதி பாண்டியனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சிக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே பாண்டியன் இறந்ததாக தெரிவித்தனர். பாண்டியனின் உடல் மேக்கிழார்பட்டி சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. பாண்டியனின் அண்ணன்கள் மூவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு அன்று மாலையே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் இறந்தார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சடலம் தோண்டியெடுப்பு

தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக பாண்டியனின் மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆண்டிபட்டி வட்டாட்சியர் பாலசண்முகம், ஏடிஎஸ்பி சுருளி ராஜா, டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பாலகுரு ஆகியோர் முன்னிலையில் நேற்று பாண்டியன் உடலை தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவர் பிரியா தலைமையில் மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து மீண்டும் உடலை புதைத்தனர். பாண்டியன் மது குடித்ததால் உயிரிழந்தாரா அல்லது சாப்பாட்டில் விஷம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : brothers ,poison Police investigation , Poison, dead, non-vegetarian food, brothers
× RELATED பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு...