×

குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 இளம்பெண்கள் மாயம்

நாகர்கோவில்: குமரியில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உள்பட 4 இளம்ெபண்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் பேரின்பதாஸ். இவரது மகள் ரெஜி மனிஷா (22). நாகர்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்ற ரெஜி மனிஷா மீண்டும் வீடு திரும்பி வர வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, சப் இன்ஸ்பெக்டர் மாரி செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, ரெஜி மனிஷாவை தேடி வருகிறார்கள்.

அஞ்சுகிராமம் அருகே உள்ள பொட்டல்குளம் லுத்தரன் தெருவை சேர்ந்தவர் செல்வ சிவனைந்த பெருமாள். இவரது மகள் அனிஷா (22). இவர் அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 8ம்தேதி வேலைக்கு சென்ற அனிஷா, திடீரென மாயம் ஆனார். மகளை காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இது பற்றி எந்த தகவலும் இல்லாததால், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய், சப் இன்ஸ்பெக்டர் எபனேசர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, அனிஷாவை தேடி வருகிறார்கள். குலசேகரம் அருகே உள்ள தும்பக்கோடு சரக்கல்விளை பகுதியை சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி ஸ்ரீதேவி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று சோமன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி ஸ்ரீதேவி மற்றும் குழந்தைகள் இல்லை. அக்கம் பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து குலசேகரம் காவல் நிலையத்தில் சோமன் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சப் இன்ஸ்பெக்டர் தேவபிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீதேவி மற்றும் அவரது இரு குழந்தைகளையும் தேடி வருகிறார்கள்.

சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜன். இவருக்கு 19 வயதில் மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று ஊருக்கு வந்து விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்ற மாணவியை காண வில்லை. இவர் கல்லூரிக்கும் செல்ல வில்லை. இதனால் பதற்றம் அடைந்த ஏசுராஜன் பல்வேறு இடங்களில் மகளை தேடினார். ஆனால் எந்த தகவலும் இல்லாததால், இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியை தேடி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மாயமானதற்கு காதல் விவகாரம் காரணமாக இருக்குமா? அல்லது வேறு பிரச்னைகள் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : girls ,college student ,district ,Kumari , College, student, young girls, missing
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்