×

நாகர்கோவில் நகர பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை மைனஸ் அளவை தொட்டது

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் முக்கடல் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 0.15 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதன் கீழ் மைனஸ் 25 அடி தண்ணீர் உள்ளது. ஆனால் இந்த தண்ணீரில் 9 அடி தண்ணீர் மட்டுமே எடுக்க முடியும். அதன்பிறகு தண்ணீர் எடுக்கமுடியாத நிலை இருந்து வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால், மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என மாநகராட்சி சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அனந்தனாறு சானலில் திறந்துவிடப்படும் தண்ணீர் முக்கடல் அணை பகுதியில் இருந்து பம்பிங் செய்யப்பட்டு, முக்கடல் அணையில் விடப்பட்டு மீண்டும் அங்கிருந்து குழாய் மூலம் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 முக்கடலில் போதிய தண்ணீர் இருக்கும்போது 3 நாள் முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம்செய்யப்பட்டு வந்தது. தற்போது போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தண்ணீர் விநியோகம் 12 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை ஆகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தண்ணீர் கேன்களை விலைக்கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முக்கடல் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் திறந்துவிட கலெக்டரிடம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டது. தற்போது குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்துவிடப்படும் தண்ணீர் முக்கடல் அணைபகுதியில் வரும்போது சுமார் 35 கனஅடி முதல் 40 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. இந்த தண்ணீரை முக்கடல் அணையில் விட்டு அங்கிருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 150 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டால் மாநகராட்சி பகுதிக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய முடியும். முக்கடல் அணை தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. மழை கைகொடுக்கும் பட்சத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றார்.

 குமரியில் அக்னிவெயில் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது கார்மேகம் இருண்டு வருகிறது. ஆனால் மழை பெய்யாமல் உள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்தாலும், வெம்மைதாக்கம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை. ஆனால் பேச்சிப்பாறை அணைக்கு மட்டும் குறைந்த அளவு தண்ணீர் மட்டும் வந்துகொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் விவரம் வருமாறு: பேச்சிப்பாறை 1.20 அடியாக உள்ளது. அணைக்கு 77 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 62 கன அடிதண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பெருஞ்சாணி 22.75 அடியாக உள்ளது. அணைக்கு 13 கன அடிதண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. சிற்றார் 1ல் 5.35 அடியும், சிற்றார் 2ல் 5.45 அடியும், பொய்கை 9.50 அடியும், மாம்பழத்துறையாறு 42.98 அடியும், முக்கடல் 0.15 அடியும் தண்ணீர் உள்ளது.

Tags : town area ,Nagarcoil ,mining dam , Mukkadal Dam, Nagercoil
× RELATED நாகர்கோவில் - நெல்லை பயணம் கண்டக்டர்...